நில அபகரிப்புகள் தொடருமாயின் தமிழ் மக்களின் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப முடியாது என மனித உரிமைகளுக்கான ஐ.நா.-வின் துணை உயர்ஸ்தானிகர் கேட் கிள்மோர் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 37ஆவது கூட்டத்தொடரில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற இலங்கை குறித்த விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும், அரசாங்கத்தின் மீதான மக்கள் நம்பிக்கையை அதிகரிக்க வேண்டுமாயின் நில அபகரிப்புகள் நிறுத்தப்பட வேண்டியதுடன், பாதுகாப்பு படைகளுக்காக ஒதுக்கப்பட்ட காணிகளுக்கு நியாயமான இழப்பீடுகளை தீர்மானிப்பதற்கான சுயாதீனமான வழிமுறைகளை கையாள்வதும் அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, இலங்கையில் காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பான சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு 20 மாதங்கள் கழித்தே அதற்கான ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், அது குறித்து மிகுந்த வருத்தத்தையும் வெளிப்படுத்தினார்.
எவ்வாறாயினும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்துடனான இலங்கை அரசாங்கத்தின் ஆக்கபூர்வமான பங்களிப்புகள் வரவேற்கத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.