இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் அண்டனி கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘தமிழரசன்’ எனும் திரைப்படத்தின் புதிய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இயக்குநர் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘தமிழரசன்’. விஜய் அண்டனி கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகர் ரம்யா நம்பீசன் நடித்திருக்கிறார்.
இவர்களுடன் பிரணவ் மோகன்லால், சோனு சூட், யோகி பாபு, சங்கீதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு இசை ஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார்.
எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை எஸ் என் எஸ் மூவிஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். கௌசல்யா ராணி தயாரித்திருக்கிறார்.
இந்தத் திரைப்படம் கொரோனா காலகட்டத்திற்கு முன்பே தயாராகி இருந்தாலும் வெளியீட்டில் பல தடைகளை எதிர்கொண்டது.
தற்போது தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ஆம் திகதியன்று விஜய் அண்டனியின் தயாரிப்பில் உருவான ‘பிச்சைக்காரன் 2’ வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் வணிக ரீதியான பேச்சு வார்த்தைக்கு பிறகு விஜய் அண்டனி நடிப்பில் தயாராகி வெளிவராத ‘தமிழரசன்’ எனும் திரைப்படம் வெளியாகிறது.
பலமுறை இந்த திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்ட பின்னர், பல காரணங்களால் இந்த திரைப்படம் வெளியாகாமல் இருந்தது. இந்த முறை இந்த திரைப்படம் உறுதியாக வெளியாகும் என்றும், ரசிகர்களின் பேராதரவு கிடைக்கும் என்றும் திரையுலக வணிகர்கள் அவதானிக்கிறார்கள்.