ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை உலக தமிழர்கள் புறக்கணித்துள்ளார்கள்.இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் முகவர்களாக செயற்படும் உலக தமிழர் பேரவை என்ற தமிழ் துரோக அமைப்பை கொண்டு ‘இமயமலை பிரகடனம்’ என்ற ஏமாற்று நாடகத்தை ஜனாதிபதி அரங்கேற்றுகிறார்.இது முற்றிலும் அயோக்கியத்தனமானது.
சர்வதேசத்தை ஏமாற்றும் வகையில் ஜனாதிபதி தொடர்ந்து செயற்படுகிறார் இதை வன்மையாக கண்டிக்கிறோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (13) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் நிதி , பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சு அமைச்சு ஆகியவற்றுக்கான செலவுத்தலைப்புக்கள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
இனப்பிரச்சினைக்கு தீர்வு கண்டு, ஊழலற்ற வகையில் அரச நிர்வாகத்தை முன்னெடுப்பதாக குறிப்பிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை பொறுப்பேற்றார்.
இரண்டாவது வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்துள்ளார். ஆனால் நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு காண ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை.
வெறும் கண்துடைப்புக்காக வார்த்தைகளை மாத்திரம் பேசுவதும்,தமிழ் மக்கள் வழங்கிய ஆணைக்கு மாறாக செயற்படும் தமிழ் தரப்புக்களை அழைத்து பேசுவதும், சர்வதேச சமூகத்திடம் போலி நாடகத்தை அரங்கேற்றுவதும், நிதியுதவிகளை பெறுவதும்,இந்திய மேற்கு தரப்புகளின் தேவைகளுக்கு அமைய செயற்படுவதை தவிர 75 ஆண்டுகாலமாக புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைய வற் வரி சட்டமூலம் அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
நடுத்தர மக்களை இலக்காக கொண்டு வரி விதிக்கப்படுகிறது.செல்வந்த நிறுவனங்களுக்கு விரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது.அரசாங்கத்தின் புதிய வரிக்கொள்கையால் ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளுக்கு ஒட்டுமொத்த மக்களும் ஓரணியாக இணைந்து எதிர்ப்பு தெரிவிக்க முடியாத அளவுக்கு இனங்களுக்கு மத்தியில் முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளன.
இனங்களை ஆட்சியாளர்கள் பிரித்து வைத்துள்ளார்கள்.அதற்காகவே விடுதலை புலிகள் அமைப்பு மீதான அச்சம் தற்போது பயன்படுத்தப்படுகிறது.
யுத்தத்துக்கு பின்னரான காலப்பகுதியிலேனும் இந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமாயின் நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.
இனங்களுக்கிடையில் இரு துருவங்களாக்கவுள்ள ஒற்றையாட்சி முறைமையை ஒழிக்க வேண்டும்.தமிழ் தேசிய இறைமையை அங்கீகரிக்கும் வகையில் சமஷ்டியாட்சி முறைமையிலான அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும். என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
அதேபோல் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தை ‘போரால் அழிந்த பிரதேசமாக பிரகடனப்படுத்தி’ அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு வரிச்சலுகை, இலகு கடனை வழங்கி உற்பத்தி தொழிற்றுறையை மேம்படுத்த வேண்டும்.அதற்கு புதிய திட்டத்தை அமுல்படுத்துங்கள் என பலமுறை வலியுறுத்தியுள்ளோம்.ஆனால் இன்றுவரை சாதகமான பதில் கிடைக்கவில்லை.
விடுதலை புலிகளுக்கும்,இலங்கை அரசுக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்ற போது சுனாமியால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை கட்டியெழுப்ப ‘சுனாமிக்கு பிந்திய முகாமைத்துவ கட்டமைப்பு’அரசுக்கும் புலிகளுக்குமிடையில் கைச்சாத்திடப்பட்டது.
இது நாட்டை பிரிக்கும் கட்டமைப்பல்ல.தேசத்தை கட்டியெழுப்பும் கட்டமைப்பு.இதேபோல் தமிழ் மக்களின் நம்பிக்கையை வெல்ல வடக்கு மற்றும் கிழக்கை கட்டியெழுப்பும் கட்டமைப்பை உருவாக்குங்கள் என்று தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.
வரவு செலவுத் திட்டத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண அபிவிருத்திக்காக 0.11 சதவீதமளவில் குறைந்தளவிலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.ஆனால் முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழர்களின் பூர்வீக நிலத்தில் திட்டமிட்ட வகையில் குடியமர்த்தப்பட்டுள்ள கொக்குத்தொடுவாய், கொக்கிளாய் மற்றும் மணலாற்று பகுதியில் சிங்கள குடியேற்றங்களை அபிவிருத்தி செய்ய கடந்த காலப்பகுதியில் 07 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
சிங்களவர்களின் அபிவிருத்திக்காக ஆமையன் குளம்,முந்திரியன் குளம் ஆகிய குளங்களை இணைத்து நீர்பாசன திட்டம் அமைக்கப்படுகிறது.மறுபுறம் எமது தமிழர்களின் கடல் வளங்கள் தெற்கு மீனவர்களாலும்,இந்திய மீனவர்களாலும் அழிக்கப்படுகின்றன.
இவ்வாறான சூழ்நிலையில் இந்த வரவு செலவுத் திட்டம் எமது மக்களை புறக்கணித்துள்ளது,நசுக்குகிறது.மறுபுறம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் எமது மக்கள் தொடர்ந்து கைது செய்யப்படுகிறார்கள்.வஞ்சிக்கப்படுகிறார்கள்.இவ்வாறான நிலையில் நாங்கள் எவ்வாறு வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவு வழங்க முடியும்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை உலக தமிழர்கள் புறக்கணித்துள்ளார்கள்.இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் முகவர்களாக செயற்படும் உலக தமிழர் பேரவை என்ற தமிழ் துரோக அமைப்பை கொண்டு ‘இமயமலை பிரகடனம்’ என்ற ஏமாற்று நாடகத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரங்கேற்றுகிறார்.இது முற்றிலும் அயோக்கியத்தனமானது.
சர்வதேசத்தை ஏமாற்றும் வகையில் ஜனாதிபதி தொடர்ந்து செயற்படுகிறார் இதை வன்மையாக கண்டிக்கிறோம் என்றார்.