அரசியல் கைதிகளின் விடுதலைக்கு தமிழ் எம்பிக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் கண்டி சிறைச்சாலை விஜயத்தின் பின் ஆனந்தன் எம்பி பகிரங்க கோரிக்கைதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு தமிழ் எம்பிக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் கண்டி சிறைச்சாலை விஜயத்தின் பின் ஆனந்தன் எம்.பி தெரிவித்துள்ளார்.
நேற்று கண்டி சிறைச்சாலைக்கு விஜயம் செய்த பின் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
சிறைச்சாலைகளில் முறையான விசாரணைகளின்றி பல வருடங்களாகத் தவிக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு நாட்டில் உள்ள அனைத்துத் தமிழ் எம்.பிக்களும் ஒன்றிணைந்து குரல் கொடுக்கவும், நடவடிக்கை எடுக்கவும் முன்வர வேண்டும்.
சைட்டம் பிரச்சினைக்கு ஒரு விசேட குழு அமைத்து தீர்வு கண்டதைப் போன்று, தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரத்திற்கும் ஒரு விசேட குழு அமைத்து அரசியல் கைதிகளின் நிலைமைகளை ஆராய்ந்து அதற்கேற்ற வகையில் துரிதமாகத் தீர்வு கண்டு விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அரசியல் கைதிகள் என்னிடம் கேட்டுள்ளனர்.
கண்டி சிறைச்சாலையில் 11 தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களில் ஒருவர் கிளிநொச்சியைச் சேர்ந்தவர். மற்றுமொருவர் முல்லைத்தீவைச் சேர்ந்தவர். ஏனையோர் மலையகத்தின் பல பகுதிகளையும் சேர்ந்தவர்களாவர்.
நடுத்தர வயதுடைய இந்தக் கைதிகள் தங்களைப் பார்வையிடுவதற்கும் தங்களுடைய நிலைமைகளைக் கேட்பதற்கும் அரசியல்வாதிகளோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களோ வருவதில்லை என கவலை கொண்டிருக்கின்றார்கள்.
மலையகத் தலைநகராகிய கண்டி சிறைச்சாலையில் பல வருடங்களாக இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள போதிலும், குறிப்பாக மலையக தமிழ் எம்பிக்கள் எவரும் தங்கள் நிலைமைகளை அறிவதற்கு வருவதில்லை என்பது குறித்து மிகுந்த மனவருத்தமடைந்துள்ளார்கள்.
இங்கு பத்து வருடங்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் உட்பட அனைவரும் பல வருடங்கள் சிறைவாசம் அனுபவித்து வருகின்றார்கள். இங்கு தண்டனை பெற்றவர்களும், வழக்கு விசாரணை முடியாதவர்களும் இருக்கின்றார்கள். தங்களுடைய வழக்கு விசாரணைகள் துரிதமாக நடத்தப்படுவதில்லை என அவர்கள் கவலையோடு கூறினார்கள்.
கடந்த பத்து வருடங்களாக இங்கு சிறைவாசம் அனுபவித்து வருகின்ற ஒரு கைதிக்கு எதிராக 3 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில் ஒரு வழக்கில் 2 வருட சிறைத் தண்டனையும், ஒரு வருட புனர்வாழ்வுத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
மிகுதி இரண்டு வழக்குகளின் விசாரணைகள் மிகவும் தாமதமாகவே நடைபெறுவதாக அவர் கூறினார். நீண்டகால இடைவெளியில் வழக்குத் தவணைகள் போடப்படுவதாகவும், எப்போது அந்த வழக்குகள் முடிவடையும், அவற்றில் என்ன வகையான தீர்ப்பு வழங்கப்படும் என்பது தெரியாதுள்ளது என தெரிவித்த அவர் மிகவும் மனம் நொந்த நிலையில் காணப்பட்டார்.
இன்னுமொரு கைதியுடைய வழக்கில் பொலிசாருக்கு எதிராகப் பிடியாணை கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எட்டு தவணைகள் கடந்துவிட்டன. ஆனால் சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரி நீதிமன்றத்தில் வழக்குத் தவணைக்கு சமூகமளிப்பதில்லை. வழக்கு தொடர்ந்து தவணையிடப்படுகின்றது. நீதிமன்றத்திற்கு வருகை தராமல் உள்ள அந்த பொலிஸ் அதிகாரிக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
வழக்குகளைத் தொடர்ச்சியாக விசாரணை செய்வதற்கு பொலிசார் ஒத்துழைப்பதில்லை. அதேபோன்று வழக்கு சம்பந்தமான பல விடயங்களில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனை மற்றும் அறிவுறுத்தல்களுக்காக நீதிமன்றம் காத்திருக்க வேண்டிய நிலையும் உள்ளது. இதனால் தங்களுடைய வழக்கு விசாரணைகள் மிகவும் தாமதமடைந்துள்ளதாக அந்தக் கைதிகள் தெரிவித்தனர்.
இராணுவத்தினர் மீது எந்த காரணத்தைக் கொண்டும் குற்றம் சுமத்தப்படுவதற்கு இடமளிக்கப்படுவதில்லை என்றும் எந்தவொரு இராணுவ வீரரையும் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு அனுமதிக்கப் போவதில்லை என அரசாங்கம் கூறுகின்றது. இராணுவத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் இந்த நிலைப்பாடும் தங்களுடைய வழக்குகள் தாமதமடைவதற்கு முக்கிய காரணமாகும் என்றும் அவர்கள் கூறினர்.
மற்றுமொரு அரசியல் கைதிக்கு எதிராக 8 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. அவற்றில் சாட்சிகளாக இருக்கின்ற 7, 8 பேரில் ஒருவருக்கு ஒரு வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இன்னுமொரு சாட்சிக்கு 7 வருடங்கள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் வழக்கு விசாரணைகள் முறையாக நடைபெறுவதில்லை. சாட்சிகளையும் உரிய முறையில் நீதிமன்றத்திற்குக் கொண்டு வருவதில்லை.
சூரியமூர்த்தி ஜீவநேசன் என்ற கைதி 263 தடவைகள் வழக்குத் தவணைகளுக்காக நீதிமன்றங்களில் ஏறி இறங்கியிருக்கின்றார். கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி சரணடைந்த இவருக்கு எதிராக 8 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பத்து வருடங்களாக இவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இவருக்கு எதிரான ஒரு வழக்கில் 5 வருடச் சிறைத் தண்டனையும் ஒரு வருடம் புனர்வாழ்வுத் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
ஏனைய வழக்குகளில் என்ன வகையான தீர்ப்புக்கள் வழங்கப்படும் எப்போது அந்த வழக்குகள் முடிவடையும் என்பது தெரியாத நிலையில் இழுபட்டுக் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
இன்னுமொரு கைதி ஒன்றரை வருடங்களாக நடைபெற்ற விசாரணையின்போது சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டிருந்ததாகவும், அது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள போதிலும், வருடக்கணக்காக நாட்கள் கழிந்த பின்னரும், அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை. அதனால் அந்த வழக்கு விசாரணை இழுபட்டுக் கொண்டிருக்கின்றது.
ஆனால் அந்த அறிக்கையை சமர்ப்பிக்காத பொலிசாருக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அந்தக் கைதி தெரிவித்தார். எப்போது இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படும் எப்போது தனது வழக்கு முடிவடையும் என தெரியாமல் அவர் தவித்துக் கொண்டிருக்கின்றார்.
நல்லிணக்கம், மனிதாபிமானம் என்றெல்லாம் பேசப்படுகின்றது. ஆனால், அரசியல் கைதிகள் விடயத்தில் அது கணக்கில் எடுக்கப்படுவதில்லை.
சைட்டம் பிரச்சினைக்கு ஜனாதிபதி ஒரு விசேட குழுமை அமைத்து தீர்வு கண்டதைப் போன்று தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கும் ஒரு விசேட குழு அமைத்து நடவடிக்கை எடுத்து, தங்களை விரைவாக விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என அந்தக் கைதிகள் என்னிடம் கோரியுள்ளார்கள்.
தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றத்தை ஒப்புக்கொண்டாலும், தண்டனைக்கு மேல் தண்டனை வழ்ஙகப்படுகின்றது. தீர்ப்பு வழங்கப்படும் போது சிறையில் இருந்த காலம் கணக்கில் எடுக்கப்படுவதில்லை ஏற்கனவே சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த காலத்தைத் தண்டனை அனுபவித்ததாகக் கணக்கில் எடுத்து, அதற்கேற்ற வகையில் தண்டனை வழங்கப்படுவதில்லை.
புனர்வாழ்வுப் பயிற்சி பெறுவதற்கு ஒப்புக்கொண்டு அரசாங்கத்தின் வேண்டுகோளை ஏற்று அதற்கான இணக்கத்தைத் தெரிவித்து விண்ணப்பங்கள் கையளிக்கப்பட்டுள்ள போதிலும், அது இது வரையில் கவனத்தில் எடுக்கப்படவில்லை. இவ்வாறு ஆறு வருடங்களாகக் காத்திருப்பதாக ஒரு கைதி என்னிடம் கூறினார்.
சிறைச்சாலை என்பது குற்றம் புரிந்தவர்கள் திருந்துவதற்கான சந்தர்ப்பத்தை அளிக்கின்ற ஒரு நிலையமாகச் சொல்லப்படுகின்றது. ஆனால் தங்களைப் பொருத்தமட்டில், தங்களை மேலும் மேலும் தண்டித்து வருத்துவதற்காகவே, விசாரணைகளின்றியும், வழக்குகளை விரைவாக முடிக்காமலும், வைத்திருக்கின்றார்கள் என்று எண்ணத் தோன்றுவதாகவும் அந்த கைதிகள் குறிப்பிட்டனர்.
அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. ஆனால் அந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களும், அந்த சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டவர்களும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.
ஒரு வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்டு, 20 வருட்ஙகள் சிறைச் தண்டனை வழங்கப்பட்டால், அவர் 13 வருடங்களில் வெளியில் வரமுடியும். வருடந்தோறும் வருகின்ற சுதந்திரதினம் போன்ற விசேட தினங்களுக்கு தண்டனைக் காலத்தில் கழிவு வழங்கப்படுவது வழக்கம். அவ்வாறு ஒரு தினத்திற்கு 7 நாட்கள் கழிக்கப்பட வேண்டும். அத்தகைய தண்டனைக்கால கழிவு கூட தங்களுக்கு வழங்கப்படுவதில்லை என்று அவர்கள் தெரிவித்தார்கள்.
பாராளுமன்றத்தில் பராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவின் கேள்விக்குப் பதிலளித்த நீதி அமைச்சர் தலதா அத்துக்கோறளை 17 பேர் மட்டுமே அரசியல் கைதிகள் இருப்பதாகக் கூறியிருக்கின்றார். உண்மையில் 132 அரசியல் கைதிகள் இலங்கையின் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள். ஆனால் அவர் 17 பேர் மாத்திரமே இருக்கின்றனர் என கூறினால் அந்த 17 யார் என்ற விபரத்தை வெளியிட வேண்டும் என அவர்கள் கேட்கின்றார்கள்.
கண்டி சிறைச்சாலையில் உள்ள ஏனைய குற்றவாளிக் கைதிகளினால் தங்களுக்கு ஆபத்து ஏற்படக் கூடிய ந்pலைமை இருப்பதாகத் தெரிவித்த அவர்கள், சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சரின் ஊடாகத் தங்களுடைய பாதுகாப்பை உறுதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரினார்கள் எனத் தெரிவித்துள்ளார்.