இலங்கையில் போர் நிலவிய சூழலில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பல வருட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு காலம் தாழ்த்தாது பொது மன்னிப்பு வழங்கி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுதலை செய்ய வேண்டும். இவ்வாறு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன் குறிப்பிட்டார்.
இலங்கையிலுள்ள சிறைக்கூடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன் மேலும் குறிப்பிடுகையில்,
இந்நாட்டில் தமிழர்களுக்கு ஒரு நீதியும் சிங்களவர்களுக்கு ஒரு நீதியும் உள்ளது. 1971 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக ஆயுதப்புரட்சியினை மேற்கொண்ட மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்கள் ( JVP ) கைது செய்யப்பட்டு சிறைக் கூடங்களில் அடைக்கப்பட்டனர். அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்தவர்களை முன்னாள் பிரதம மந்திரி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அம்மையார் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தார். இதன் மூலம் இவர்கள் இன்று ஜனநாயகப் போராட்டத்தில் கலந்து கொண்டு அரசியலில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால் இதே மாதிரியான சந்தேகத்தின் பேரில் வகை தொகை இன்றி கைது செய்யப்பட்டு சித்திரவதைகளுக்கு ஆளாகி பல வருடகாலமாக மன விரக்தியுடன் வாழ்கின்ற தமிழ் அரசியல் கைதிகளை தமிழர்கள் என்ற காரணத்திற்காகவா ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யாமல் உள்ளார்.
முன்னாள் ஆட்சியாளர்களை அதாவது மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான தரப்பினரை வீட்டிற்கு அனுப்பி வைத்து இந்நாட்டில் நல்லாட்சியைத் தோற்றுவித்து சுதந்திரக்காற்றை சுத்தமாக சுவாசிப்பதற்கு அளப்பெரிய பங்களிப்பை நல்கிய தமிழர்களின் விடயங்களில் ஏனோ தானோ என்று ஜனாதிபதி இருப்பது ஏன்?
1971 ஆம் ஆண்டு காலப்பகுதியில் JVP கிளர்ச்சி இடம்பெற்றது. இக்காலத்தில் கிளர்ச்சியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சிறைவாசத்தின் வலியை உணர்ந்த மைத்திரிபால சிறிசேன தனக்கு நிகழ்ந்த சம்பவம் என்னவென்பதை உணராதவரா?
நல்லாட்சி அரசாங்கத்தின் தேர்தல்கால அறைகூவலில் ஒன்றாக தமிழ் மக்களின் வாக்குகளை பெறுவதற்காக இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை போன்றவற்றை தூக்கிப்பிடித்துப் பேசியவர்கள் இன்று மௌனமாக இருப்பது ஏன்?
எனவே மனக்காயங்களுடன் குடும்பங்களைப் பிரிந்து சிறையில் வாழும் தமிழ் அரசியல் கைதிளுக்கு கருணை கூர்ந்து பொது மன்னிப்பு வழங்கி அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று உருக்கமாக கேட்டுக் கொள்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.