இயக்குனர் ஜெனோசன் ராஜேஸ்வர் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் புதிய காணொளிப்பாடல் “உன் நினைவுகளில்”. காதல் கொண்ட இரு நெஞ்சம் காதலிக்கும் போதும் காதல் பிரிவின் போதும் காணப்படக்கூடிய காதல்வயப்பட்ட முத்தத்தின் காட்சிகளையும் பிரிவின் வேதனையையும் பாடலில் காட்டியிருக்கின்றார் இயக்குனர். பாடலில் காதல் நாயகனும், நாயகியுமாக முகேஷ்ரவியும், பிரீத்தி குமாரியும் நடித்திருக்கி்றனர்.

பாடலின் இயக்குனர் இலங்கையை சேர்ந்தவர். இவரது இயக்கத்தில் சொன்னாலும் கேக்கவா போறீங்கள்…! எனும் ஈழத்தின் வலியை காட்டும் ஒரு சமூக நலன் சார்ந்த குறுந்திரைப்படம் வெளியாகியிருந்தது. அது மட்டுமல்லாமல் அவளதிகாரம், வறள் போன்ற பாடல் , குறும்படங்களையும் தயாரித்து பிகைண்வூட்ஸ், சினிமா விகடன் போன்ற தளங்களில் வெளியிட்டிருந்தார். இருப்பினும் சினிமாவை கற்றுக்கொள்ளும் எண்ணத்தில் தமிழ் நாட்டில் நடிகர் விமலின் திரைப்படமான “தெய்வ மச்சான்” திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியிருந்தார். அதை தொடர்ந்து சென்னையிலேயே இந்த பாடலை இயக்கியிருக்கின்றார்.



இப்பாடலுக்கு இசையமைத்திருக்குன்றார் தீசன் அவர்கள். கெளதம் கார்திக் நடிப்பில் இயக்குனர் அருண்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் “செல்லப்பிள்ளை” திரைப்படத்தின் இசையமைப்பாளர் தான் தீசன்.
பாடல் வரிகளை அ.ப.இராசா எழுதியிருக்கின்றார். இவர் வரிகளில் உருவாகிய குட்டிப்பட்டாஸ் மற்றும் சுகர் பேபி ஆகிய பாடல்கள் அண்மையில் ஹிட்டான பாடல்களாக இருக்கின்றன. அந்த வகையிலும் இந்தப்பாடலும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
காணொளிப்பாடலின் முதல் பார்வையை இயக்குனர் பாரதிராஜா மற்றும் அவரது மகன் நடிகர் மனோஜ் பாராதிராஜா ஆகியோர் வெளியிட்டு வைத்தனர்.
ஒளிப்பதிவாளராக றெஜி செல்வராசா பணியாற்றியிருக்கின்றார். இவர் அண்மையில் கதிர் மற்றும் சமுத்திரகனி இணைந்து நடிக்கும் திரைப்படத்தில் உதவி ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியிருக்கின்றார்.
மேதகு மற்றும் சல்லியர்கள் திரைப்படத்தின் படத்தொகுப்பாளர் சி.எம்.இளங்கோவன் இப்பாடலுக்கான படத்தொகுப்பு பணியை செய்திருக்கின்றார். அண்மையில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “அண்ணாத்த” திரைப்படத்தின் துணை படத்தொகுப்பாளராகவும் இவர் பணியாற்றியிருக்கின்றார்.
பாடலுக்கான பெரும் ஆதரவு தரும் வகையில் செல்லப்பிள்ளை திரைப்பட இயக்குனர் அருண்சந்திரன் அவர்களுக்கு பாடல் குழுவினர் தங்கள் நன்றிகளை தெரிவித்து கொள்கின்றனர்.
இப்பாடலை தயாரித்து வெளியிடுகின்றார் (படைப்பாளிகள் உலகம்) Tamil Creators ஐங்கரன் கதிர்காமநாதன் அவர்கள். இலங்கை தமிழ் சினிமாவின் பல்வேறு கட்டங்களுக்கு ஆணிவேராக இருக்கும் இவரது சிலோன் பிக்ஸர்ச் யூடியுப் தளத்தில் பாடல் வெளியாகி
மிகுந்த வரவேற்பு மிக்க பாடலாக அனைவரிடத்திலும் பேசப்படும் படைப்பாக மாறி வருகின்றது.
இந்த பாடலை தென்னிந்தியாவின் பிரபலங்கள் பலர் இன்று சமூக வலைத்தளங்கள் வழியாக வெளியிட்டு வைத்திருக்கின்றனர்.
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், நடிகர் சூரி, பிறேம்ஜி, ஆர்.கே.சுரேஸ், அருள்தாஸ் , காளிதாஸ் ஜெயராம் , பிக்போஸ் புகழ் பாலாஜி, ஆகிய பிரபலங்களே இவ்வாறு பாடலை பகிர்ந்து ஆதரவளித்திருக்கின்றனர்.