தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான ‘நீட்’ தேர்வை நாடு முழுவதும் 16 லட்சத்து 14 ஆயிரத்து 714 பேர் கொரோனா நோய்த்தொற்றுக்கு இடையில் இன்று சந்திக்கின்றனர். தமிழ்நாட்டை பொறுத்தவரையில், 40 ஆயிரத்து 376 மாணவர்கள், 70 ஆயிரத்து 594 மாணவிகள், ஒரு திருநங்கை (தஞ்சையில்) என மொத்தம் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 971 பேர் தேர்வு எழுத உள்ளனர். பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்த ‘நீட்’ தேர்வு மாலை 5 மணியுடன் நிறைவுபெறுகிறது.
இந்த நிலையில், ‘நீட்’ தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கூழையூர் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி சிவக்குமார் என்பவரின் மகன் தனுஷ் (20). ஏற்கனவே 2 முறை நீட் தேர்வு எழுதிய நிலையில் இன்று 3-வது முறையாக தேர்வை எழுத இருந்தார்.
இரவு 1 மணிவரை தந்தையுடன் பேசிக்கொண்டிருந்த தனுஷ், அதன் பின் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நீட் தேர்வின் அச்சத்தின் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.