தமிழ்ச் சமுதாயத்தின் பங்களிப்புடனே வெற்றி பெற்றேன்! அவர்களிற்காகவும் பணி செய்வேன் – றேமண்ட் சோ
இந்தத் தொகுதியின் இடைத்தேர்தலில் நான் போட்டியிட முன்வந்த போது இந்தத் தேர்தலை வெல்வதானால் தமிழ் மக்களின் வாக்குக்களும் அவசியம் என்பதை உணர்ந்திருந்தேன்.
அவர்களுடன் தினமும் பழகும் ஒருவன் என்ற வகையில் அவர்களது வாக்குக்கள் எனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையை அவர்கள் வீணடிக்கவில்லை அதற்காக நான் கடமைப்பட்டிருக்கின்றேன்.
இவ்வாறு இன்று தேர்தல் வெற்றியைக் கொண்டாடுமுகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரவு உணவு விருந்தில் கலந்து கொண்ட 600க்கு மேற்பட்ட ஆதரவாளர்கள் மத்தியில் திரு. றேமண்ட் சோ தெரிவித்தார்.
சீனர்களும் அதற்கு அடுத்தபடியாக தமிழர்களும் பெரும்பாண்மையாக உள்ள இந்தத் தொகுதிக்கான இடைத்தேர்தல் இரு தமிழர்கள் போட்டியிட்ட காரணத்தால் பெரும் எதிர்பார்ப்பைப் பெற்றிருந்த போதிலும், திரு. றேமண்ட் சோ இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தார்.
வாக்களித்த தமிழர்களில 23 விழுக்காட்டினர் றேமண்ட் சோவிற்கு வாக்களித்தனர். வாக்களித்த 4600 தமிழர்களில் பெரும்பாலோனோர் நீதன் சாணிற்கே வாக்களித்த போதும், வாக்களித்த தமிழர்களின் தொகை மொத்த தமிழ் வாக்காளர் தொகையான 15,700ல் கால்வாசிக்கும் குறைவான தொகையாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்றைய இந்த வெற்றிவிழாவில் கனடிய தேசிய நீரோட்டத்தைச் சேர்ந்தவர்கள், சீன, இந்திய, பாகிஸ்தானிய, பிலிப்பைன்ஸ் மற்றும் கறுப்பினப் பிரதிநிதிகளென பல்சமூகங்சார் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
அத்தகையதொரு விழாவில் வைத்து தமிழர்கள் சமூகம் கௌவரப்படுத்தப்பட்டதானது தமது கடின உழைப்பிற்கான பிரதிபலனாகுமென கனடியத் தமிழ் கண்சவேட்டிவ் அமைப்பினர் தெரிவித்தனர்.