தற்போது தமிழ் மக்கள் எதிர்நோக்கும பிரச்சினைகள் தொடர்பாக கொழும்பிலுள்ள இராஜதந்திரிகளுக்கும் தனித்தனியாக தமிழ்க் கட்சிகள் இணைந்து கடிதங்களை அனுப்புவதற்கு தீர்மானித்துள்ளன.
இலங்கை தமிழ் அரசுக்கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப். தமிழ்த் தேசியக் கட்சி, ஜனநாயகப் போரளிகள் ஆகிய தரப்புக்களே மேற்படி தீர்மனத்தை எடுத்துள்ள நிலையில் அக்கடிதங்களில் இன்றைதினம் தலைவர்கள் கையொப்பமிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, குறித்த கடிதங்களில் கையொப்பமிடும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தபோதும், கடிதங்களில் இராஜதந்திரிகளுக்கான தலைப்புக்கள் தனித்தனியாக இடப்பட வேண்டும் என்கின்ற முன்மொழிவு செய்யப்பட்டதன் காரணமாகவும் மாவை.சோ.சேனாதிராஜா மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் தவிர்க்க முடியாத காரணங்களால் பங்கேற்க முடியாத நிலைமைகள் உருவாகியதன் காரணமாகவும் அச்செயற்பாடு நிறைவடைந்திருக்கவில்லை.
இதேவேளை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் குறித்த கட்சிகள் இணைந்து தனியான கடிதமொன்றை அனுப்பவுள்ளன. இக்கடித்தினை தயாரிக்கின்ற செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, அக்கடிதம் எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெறும் ஹர்த்தாலின் பின்னரேயே இறுதி செய்யப்பட்டு மேற்படி கட்சித்தலைவர்களால் கையொப்பமிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் ஜனநாயக தேசியக் கூட்டணியின் ஊடகப்பேச்சாளரும், ஈ.பி.ஆர்.எல்.எப்இன் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரனிடத்தில் வினவியபோது, “தமிழ்க் கட்சிகள் இணைந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பவுள்ளன. தற்போது தமிழ் மக்கள் எதிர்நோக்கும பிரச்சினைகள் தொடர்பாகவும் கொழும்பில் இருக்கக்கூடிய இராஜதந் திரிகளுக்கும் கடிதங்கள் அனுப்பப்ப டவுள்ளன. இது தொடர்பான நடவடிக்கைகளை அடுத்தடுத்த தினங்களில் மேற்கொள்ளவுள்ளோம்” என்றார்.