தமிழீழத்துக்காக தன்னுயிர் தந்த தியாகி திலீபனின் 29ஆம் ஆண்டு நினைவு
தியாகி திலீபன் அகிம்சை வழிப் போராட்டத்தினை முன்னெடுப்பதற்கான ஆரம்ப நாளான இன்றுவியாழக்கிழமை யாழ்.நல்லூர் வடக்கு வீதியில் அவர் உண்ணாவிரதம் இருந்த இடத்திலும், நல்லூர் வீதியில் உள்ள அவரது நினைவுத் தூபியிலும் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது.
ஜனநாயக போராளிகள் கட்சியினரின் ஏற்பாட்டில் இன்று வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
அங்கு கருத்து தெரிவித்த முன்னாள் போராளிகள்,
யாழ்.மண்ணில் நல்லூர் வீதியில் 29 வருடங்களுக்கு முன்னர் தமிழ் மக்களுக்கு அகிம்சைப்போராட்டத்தின் மூலம் இனத்தின் விடுதலைக்காக போராடிய தமிழ் இனத்தின் வீரன் தியாகி திலீபன் பல சிரமத்தின் மத்தியில் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டுகளில் நினைவு தினத்தினை மிகச்சிறப்பாக செய்வதற்கான ஏற்பாடுகளைசெய்வதற்கு தற்போது ஆரம்பித்துள்ளோம்.
தியாகி திலீபன் என்ன நோக்கத்திற்காக அகிம்சை வழியில் போராடி தனது உயிரை நீத்தாரோ? அதே வழியில் தமிழ் மக்களுக்கான சுபீட்சமான அரசியல் அங்கீகாரத்தினை ஜனநாயக ரீதியில் ஜனநாயக போராளிகள் என்ற வகையில் வென்றெடுப்போம் என தியாகி திலீபனின் நினைவுத் தூபியில் நின்று சத்தியப்பிரமாணம் செய்து கொள்கின்றோம் என்றனர்.
ஜனநாயக போராளிகள் கட்சியினர் மற்றும் தமிழ் மக்கள், புலம்பெயர் தமிழ் மக்கள் அனைவரும் தியாகி திலீபனின் அகிம்சை வழியின் ஊடாக ஜனநாயகத்தினை வென்றெடுப்போம் என்றும் அறைகூவல் விடுத்தனர்.