யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் விடுதலை புலிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டதை தொடர்ந்து கடும்போக்குவாத சிங்களவர்களால் தமிழர்களை இலக்குவைத்து நாடாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட கலவரம் ஆரம்பித்து இன்றுடன் 34 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
இராணுவத்தின் மீதான தாக்குதலை தொடர்ந்து தொடர்ச்சியாக இரண்டு வாரங்கள் தமிழர்கள் மற்றும் அவர்களின் சொத்துக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மூவாயிரம் பேர் வரை கொல்லப்பட்டதுடன், பாரிய சொத்து அழிவுகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தது.
8 ஆயிரம் வீடுகளும் 5 ஆயிரம் வர்த்தக நிலையங்களும் அழிக்கப்பட்டதுடன், ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேர் வீடுகள் அற்றவர்களாக மாறியிருந்தனர்.
இந்த கலவரத்தின் பின்னர் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் புகலிடம் கோரி வெளிநாடுகளில் தஞ்சமடைந்திருந்தனர்.
இந்த கலவரத்தின் ஒருங்கிணைப்பு முறையானது, ஒர் திட்டமிட்ட செயற்பாடு என்ற பல்வேறு தமிழ் தரப்பினர் தற்போதும் நம்புவதுடன், இலங்கையின் இனப் பிரச்சினை ஆயுதப் போராட்டமாக பரிணமிப்பதற்கும் இந்த சம்பவமே அடித்தளமிட்டிருந்தது.
விடுதலை புலிகளுக்கு எதிரான யுத்தம் இராணுவ ரீதியில் முடிவுக்கொண்டுவரப்பட்ட நிலையில், தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு தொடர்ந்தும் இழுத்தடிக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.