திருகோணமலை இலுப்பைக்குளத்தில் தடைசெய்யப்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டுவரும் பெளத்த விகாரை ஒன்றின் கட்டுமானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (01) முன்னெடுக்கப்படவிருந்த ஆர்ப்பாட்டம் நிறுத்தப்பட்டது.
திருகோணமலை – நிலாவெளி காவல்துறையினால் பெறப்பட்ட நீதிமன்ற தடை உத்தரவின் போரில் குறித்த ஆர்ப்பாட்டமானது தடுத்து நிறுத்தப்பட்டது.
இலுப்பைக்குளம் பகுதியில் பொரலுகந்த ரஜமகா விகாரையின் கட்டுமானப் பணிகளுக்கு மக்களால் எதிர்ப்பு தெரிவித்துவந்த நிலையில் குறித்த பகுதியில் கட்டுமானப்பணிகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநரினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
நீதிமன்ற தடை
இருப்பினும் கடந்த திங்கட்கிழமை (25) முதல் குறித்த பகுதியில் கட்டுமானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை குறித்த பகுதியில் இடம்பெறும் கட்டுமானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதனை தடைசெய்யக் கோரியும் திருகோணமலை மக்களினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னடுக்க ஆயத்தமாகிய நிலையில் குறித்த பகுதிக்கு விஜயம் செய்த காவல்துறையினரால் 8 நபர்களது பெயர் குறிப்பிடப்பட்ட வகையிலான நீதிமன்ற தடை பெறப்பட்டுள்ளதாகவும் அங்கு ஒன்று கூடுவதற்கான அனுமதி மறுக்கப்பட்டதாகவும் காவல்துறையினரால் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து அங்கு செய்தியாளர்களுக்கு குறித்த விடயம் தொடர்பாக தெளிவுபடுத்த முற்பட்ட போது காவல்துறை உயர் அதிகாரி ஒருவரால் அதற்கு இடையூறு விளைவிக்கப்பட்டதோடு ஆர்ப்பாட்டம் மேற்கொள்வதற்காக அங்கு வருகை தந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.