அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தம் தொடர்பாக இந்தியா இனிமேல் பேசாது விட்டால் அதனால் பெருமளவுக்கு மகிழ்ச்சியடையக்கூடிய ஒருவராக நானே இருப்பேன் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
எங்களது பிரச்சினைக்கு தீர்வாக 13ஆவது திருத்தத்தை பெரும்பான்மையான தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவும் இல்லையென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எக்ஸ் தளத்தில் பதிவொன்றை இட்டுக் குறிப்பிட்டுள்ள அவர்,
மூன்று வருடங்களில் புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும் வரை மாகாண சபைகள் முறை தொடர்ந்து இருக்கும் என்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கூறிக்கொண்டிருந்தால் மாத்திரம் போதாது. மாகாணசபை தேர்தல்களை நடத்தி 13ஆவது திருத்தத்தை சாத்தியமானளவு அதிகாரங்களுடன் நடைமுறைப்படுத்துவதன் மூலம் அரசாங்கம் அது விடயத்தில் ஓரளவு நம்பகத்தன்மையைப் பெறமுடியும் என்று பத்திரிகையாளர் ஒருவர் எக்ஸ் தளத்தில் செய்த பதிவுக்குப் பதிலளித்தே கஜேந்திரகுமார் மேற்கண்ட கருத்தை அவர் வெளியிட்டிருக்கிறார்.
மாகாணசபை முறையையோ அல்லது 13ஆவது திருத்தத்தையோ இல்லாமல் செய்வதற்கு இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது என்று வடக்கு, கிழக்கு தமிழ் கட்சிகள் இது வரையில் நம்பிக்கை வைத்திருக்கக் கூடும். ஆனால், அண்மையில் இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு புதுடில்லி சென்ற ஜனாதிபதி அநுராகுமார திசாநாயக்கவுடன் பேச்சு வார்த்தைகளை நடத்திய பிறகு அவருடன் கூட்டாக நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி 13ஆவது திருத்தத்தை பற்றி எதையுமே கூறுவதை தவிர்த்தார். இதன் மூலமாக கூறப்பட்ட செய்தியை தமிழ்க்கட்சிகள் விளங்கிக் கொண்டிருக்கின்றனவோ தெரியவில்லை என்றும் அந்த பத்திரிகையாளர் தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
அதற்குப் பதிலளித்துள்ள கஜேந்திரகுமார்,
தமிழ் மக்களின் சார்பிலேயே இந்திய – இலங்கை சமாதான உடன்படிக்கையில் இந்தியா கைச்சாத்திட்டது என்பது முக்கியமாக கவனிக்கப்படவேண்டிய தாகும். சமாதான உடன்படிக்கையில் தமிழர்கள் நம்பிக்கை வைத்திருக்கும் வரை தமிழ் மக்கள் சார்பில் தலையீடு செய்வதற்கான கடமைப்பாடு இந்தி யாவுக்கு உண்டு என்று நான் நினைக்கிறேன்.
ஆனால், இன்றைய சூழ்நிலையில் சமாதான உடனபடிக்கை பொருத்த மற்றது என்று இந்தியாவே உணருமானால், அது முற்றுமுழுதாக வேறுவிடயம். நாங்கள் விரைவாக சிறந்த ஒரு தெரிவை கண்டறிய முடியும்.
ஒற்றையாட்சி அரசின் கீழ் எந்த அதிகாரப்பரவலாக்கமும் சாத்தியமில்லை என்று நீதிமன்றங்கள் திரும் பத்திரும்ப கூறியிருக்கும்போது 13ஆவது திருத்தத் தின் நடைமுறைப்படுத் தல் எவ்வாறு நடக்கமுடியும் ? அதனால் 13ஆவது திருத்தம் இனப்பிரச்னைக்கான அரசியல் தீர்வின் தொடக்கப்புள்ளியாகக்கூட ஒருபோதும் இருக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.