தமிழர்கள் தலையில் குண்டு – எச்சரிக்கை..!! அடக்கவோ அழிக்கவோ முயல வேண்டாம்
தமிழர்கள் தலையில் குண்டு போடவும், சிங்களவர்கள் தலையில் வரிச்சுமையினை சுமத்துவதனையுமே குறிக்கோளாக கொண்டு இலங்கையில் மாறி மாறி ஆட்சி நடத்தப்பட்டு வருகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் குற்றம் சுமத்தினார்.
வரவு செலவு திட்டம் தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று அவர் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில், அரசு 65000 வீடுகளை வடக்கில் புதிதாக அமைத்துத் தருவதாக வாக்குறுதி அளித்திருந்தது.
ஆனாலும் இன்று வரை அது நிறைவேற்றப்படாமல் இழுபறிநிலையே தொடர்ந்து வருகின்றது. அரசு இது தொடர்பில் விஷேட கவனம் செலுத்தி அவற்றினை அமைத்துக் கொடுக்க வேண்டும்.
மேலும், இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது மட்டுமே தற்போதைய சூழ்நிலையில் மிக அவசியமாகும். அரசு தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்ற வேண்டும்.
வன்னிவாழ் தமிழர்களை தொடர்ந்தும் அடக்கவும், அழிக்கவும் முயல வேண்டாம். தமிழர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு உண்மையான நல்லிணக்கம் நாட்டில் ஏற்பட வேண்டும்.
அதேபோல் தொடர்ந்து 30 வருடகாலமாக இலங்கையில் தமிழினம் அடக்கப்பட்டு வந்தது. அந்த நிலையே தற்போதும் தொடர்ந்து கொண்டு வருகின்றது.
உரிமைக்காக போராடி மரணித்தவர்கள் மாவீரர்கள், யுத்தத்தில் வீரமரணமடைந்தவர்கள் பெருமைப்படுத்தப்பட வேண்டியவர்கள், அத்தகைய மாவீரர்களின் சமாதியை அழித்த முறைகேடான ஆட்சியே கடந்த காலத்தில் இருந்தது.
அந்த நிலை இனியும் தொடரக்கூடாது, தமிழர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதோடு அனைத்து மக்களுக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் கேட்டுக் கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.