எமது இனத்தின் ஒற்றுமை இன்னும் பலமடைய வேண்டும். தமிழர்கள் ஆகிய எமது கலாசாரம்,பண்பாடுகள் மற்றும் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றைப் பேணிப் பாதுகாக்க வேண்டியது அனைவரினதும் கடமையாகும்.
இவ்வாறு இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
உலக தமிழ் இயக்கப் பண்பாட்டு இயக்கத்தின் 13ஆவது பன்னாட்டு மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வு யாழ்ப்பாணம் ரில்கோ உணவு விடுதியில் நேற்று நடைபெற்றது. அதில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் தெரிவித்ததாவது-;
நாம் உலகத்தின் எந்தப் பாகத்தில் வாழ்ந்தாலும் தமிழர்கள் என்ற வகையில் ஒரு குடும்பமாக அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும். நாங்கள் பாரம்பரியமானவர்கள். அதைக் காக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருக்கின்றது.
இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் பல கஷ்டங்களை அனுபவித்து வாழ்ந்தவர்கள் – வாழ்ந்து கொண்டும் இருக்கின்றனர். எமது மக்களில் அரைவாசி வீதமான மக்கள் இங்கு இல்லை. ஏறத்தாழ இலங்கைத் தமிழர்கள் பல புலம்பெயர் நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.
கலவரங்கள் காரணமாகவும் உள்நாட்டுப் போர் காரணமாகவும் சொந்த மண்ணில் வாழ முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது நாட்டில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட்டு கூட்டாட்சி நடைபெறுகின்றது. நாமும் புதிய பாதையில் பயணிக்க முயற்சிகளை எடுத்து வருகின்றோம்.
புதிய அரசமைப்பு ஒன்றை உருவாக்கி ஒரு சமத்துவத்தை ஏற்படுத்த உத்தேசித்து வருகின்றோம். அது நிறைவேற வேண்டும். புதிய அரசமைப்பில் அனைவரதும் பங்கு இருக்கின்றது. தமிழர்கள் என்ற வகையில் நாம் சுய மரியாதையுடன் சமத்துவத்துடன் வாழக்கூடிய வகையில் அது அமைய வேண்டும்.
நாம் அநீதியாக எதனையும் கேட்க முற்படக் கூடாது. நாங்கள் நீதியாகப் பெறக்கூடிய அனைத்தையும் பெறவேண்டும். அதற்கு அனைவரும் முன்வரவேண்டும். போரால் மக்கள் பல கஷ்டங்களுக்கு மத்தியில் வாழ்கின்றனர்.
போரால் எத்தனையோ பெண்கள் கணவனை இழந்து விதவைகளாக ஆக்கப்பட்டுள்ளனர். சகோதர, தாய், தந்தையரை இழந்துள்ளனர். தங்களின் வாழ்க்கையைக் கொண்டு நடத்த மிகவும் சிரமப்படுகின்றனர். அவர்களுக்கு உதவ வேண்டியது எமது அனைவரதும் கடமையாகும்.
அந்தப் பணிகளில் நாம் ஈடுபடவேண்டும். அவ்வாறன உதவிகளைச் செய்ய வேண்டும். இந்த மாநாடுகள் இன்னும் உயர்ந்து தொடர்ச்சியாக நடைபெறவேண்டும். தமிழர்களாகிய எமது இனத்தின் ஒற்றுமை மேலும் பலமடைய வேண்டும் – – என்றார்.