இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தை புறக்கணித்து லண்டனில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களை இலங்கையைச் சேர்ந்த பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ சைகை மூலம் எச்சரித்துள்ளார். இது தொடர்பான ஒளிப்பட ஆதாரம் தற்போது வெளியாகியுள்ள நிலையில், அவரை பிரித்தானியாவில் இருந்து வெளியேற்றுமாறு பிரித்தானிய வெளிவிவகார செயலாளரிடம் கோரிக்கை கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் ரயன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சோபெய்ன் மக்டோனா ஆகியோர் இக்கோரிக்கையை விடுத்துள்ளனர். அத்தோடு, தமிழர்களுக்கான அனைத்து கட்சி நாடாளுமன்ற குழுவின் தலைவர் பொரிஸ் ஜோன்ஸனுக்கும் அவர் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
இலங்கையில் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்ட சுதந்திரத்தினத்தை எதிர்த்து கருப்பு உடையணிந்து புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது கழுத்தில் கையை வைத்து அவர் மிரட்டுவதைப் போன்ற ஒளிப்படங்கள் வெளியாகியுள்ளன. அதனை அடிப்படையாகக் கொண்டே அவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு கோரப்பட்டுள்ளது.
தற்போது லண்டனில் உள்ள பிரித்தானிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகராக பிரிகேடியர் பிரியங்க பதவி வகித்து வருகின்றமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
இறுதி யுத்தத்தின் போது குறிப்பாக 2008 மற்றும் 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் வடக்கின் முக்கிய பகுதிகளில் பிரிகேடியர் பிரியங்க படை நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற யுத்தக்குற்றங்கள் மற்றும் வன்முறைகளுக்கு பொறுப்புக்கூற வேண்டிய ராணுவ அதிகாரிகளாக ஐ.நா. மற்றும் அரச சார்பற்ற அமைப்புகளால் பெயரிடப்பட்டுள்ளவர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.