தமிழர்களின் முன்னேற்றமே தைப்பொங்கல் வலியுறுத்துகின்ற முக்கிய செய்தி என அனைத்துலக தமிழர் பேரவையின் தலைவர் நிமால் விநாயகமூர்த்தி (Nimal Vinayagamoorthy) தெரிவித்துள்ளார்.
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் நிகழ்வை முன்னிட்டு அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தமிழ் மக்களின் பண்பாட்டுப் பண்டிகைகளில் ஒன்றான பொங்கல், பண்டைய காலம் தொட்டு எமது மரபோடும் வரலாற்றோடும் கலந்த அற்புதமான பண்டிகையாகும்.
தமிழர் பண்பாடு
இயற்கையை வழிபடும், விலங்கள்மீது காருண்யத்தை வெளிப்படுத்தும், உழைப்பை மதிக்கும் தைப்பொங்கல் தமிழர்களின் சிறந்த பண்பாடாகவும் அறிவு வெளிப்பாடாகவும் உள்ளது.

தமிழர்களின் தொன்மையான வாழ்வில் இருந்து இன்றுவரை முக்கிய பொருளாதாரமாக இருக்கும் நெல் உற்பத்தியின், விவசாயத்தின் முக்கியத்துவத்தையும் இயக்கத்தையும் தைப்பொங்கல் உணர்த்துகிறது.
இதன் வழியாக தமிழர்கள் பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற பெரும் செய்தி தைப்பொங்கலில் வலியுறுத்தப்படுகின்றது.
தமிழர் பண்பாட்டின் வலிமை
இதேவேளை இன்றைய உலகம் பாரிய மாற்றங்களையும் விளைவுகளையும் கண்டுள்ளபோதும், கனடா போன்ற நாடுகள் தமிழ் மரபுத் திங்களை அங்கீகரித்துள்ளமை வாயிலாக தமிழர் பண்பாட்டின் வலிமையும் நாடு கடந்து அது நிலைபெற்றிருப்பதையும் நாம் உணர முடியும்.

இனப்படுகொலைப் போரினால் பல்வேறு இன்னல்களை சந்தித்துள்ள எமது மக்கள் நம்பிக்கையுடன் மீண்டெழவும் நீதி மற்றும் விடுதலையைப் பெறவும் இந்த நாள் புதிய நம்பிக்கையையும் விடியலையும் ஏற்படுத்த வேண்டும் என்று இயற்கையை வேண்டி வாழ்த்துகிறேன்…” என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.