இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை தமிழர்களின் தாயகமாக உறுதி செய்வதற்கு இந்தியா செயற்படுவதுடன் தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு நியாயமானதும் கௌரவமானதுமான தீர்வையும் பெற்றுத்தர வேண்டும்.”
– இவ்வாறு இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேயிடம் நேரில் வலியுறுத்தினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.
அத்துடன் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தடைப்பட்டுள்ள இந்திய அபிவிருத்தித் திட்டங்களை மீளவும் முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவுக்கும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேக்கும் இடையில் கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவரின் இல்லத்தில் நேற்று நடைபெற்ற சந்திப்பிலேயே மேற்படி விடயங்கள் வலியுறுத்தப்பட்டன.
சந்திப்பு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கருத்துத் தெரிவிக்கையில்,
“கொரோனாத் தொற்றுக்கு முன்னர் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இந்திய அரசால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தற்போது இடை நிறுத்தப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய நாம், அதனை இந்தியா மீண்டும் முன்னெடுக்க வேண்டும் எனக் கோரினோம்.
அத்துடன் முக்கியமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களை தமிழ் மக்களின் தாயகமாக உறுதி செய்வதற்கு இந்தியா செயற்பட வேண்டும், இந்த மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களுக்கு நியாயமானதும் கௌரவமானதுமான அரசியல் தீர்வை இந்தியா பெற்றுக்கொடுக்க வேண்டும், தமிழ் மக்கள் சுயமரியாதை கௌரவம், நீதி, சமத்துவத்துடன் வாழ்வதற்கான வழிவகைகளை இந்தியா ஏற்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினோம்.
தமிழ் மக்கள் நீண்ட காலப் போரால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர். அவர்களுக்கு புனர்வாழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும், மீள்குடியேற்றப்பட வேண்டும், தொழில் வாய்ப்புக்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும், இதற்கான நகர்வுகளை இந்தியா முன்னெடுக்க வேண்டும் எனவும் கோரினோம்” – என்றார்.