தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில் தற்போதுள்ள ஜனாதிபதி தேர்தலை தமிழர்களின் ஒற்றுமைக்கு ஒரு ஆரம்ப புள்ளியாகத் தான் நான் பார்க்கின்றேன் என தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் அருண்மொழிவர்மன் தம்பிமுத்து (Arunmozhivarman Thambimuthu) தெரிவித்துள்ளார்.
கட்சி அலுவலகத்தில் நேற்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் நிலைப்பாடானது பேரம் பேசி, ஒப்பந்தங்களை மேற்கொண்டு அதன் மூலமாக தமிழர்களுக்கு ஒரு தீர்வை நோக்கி செல்ல முடியாது.
ஜனாதிபதித் தேர்தல்
அது மட்டுமல்ல ஒரு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்திய இந்த நேரத்திலே நாங்கள் போய் ஒரு சிங்கள தலைவருடன் பேசுவது உகந்ததல்ல என்பதும் எனது நிலைப்பாடு.
இந்த ஜனாதிபதித் தேர்தல் தமிழர்களின் ஒற்றுமைக்கு ஒரு ஆரம்ப புள்ளியாகத்தான் நான் பார்க்கின்றேன். மூன்று சிங்கள தலைவர்கள் தற்போது மிக நெருக்கமான போட்டியில் இருக்கின்றார்கள்.
யார் வந்தாலும் ஈழத் தமிழர்களுக்கான அரசியலை நோக்கி நாம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கத்தான் வேண்டும்.
கடந்த மூன்று தடவைகளாக இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் வாக்களித்தும் அவர்களது தேசிய இனப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வை காண முடியவில்லை நாங்கள் தற்போது தமிழர்களுக்கான ஒரு நிரந்தர தீர்வை நோக்கி பயணித்துக் கொண்டிருப்பதை தமிழ் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் அதற்காக உருவாக்கப்பட்டது எமது கட்சி தமிழர்களது இனப் பிரச்சினை தீர்வுக்கு அனைவரும் ஒற்றுமையாக பயணிக்க வேண்டும் என அருண்மொழிவர்மன் தம்பிமுத்து தெரிவித்துள்ளார்.