பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வுகாணும் முயற்சிகளுக்கு கட்சி சாராத அரசாங்கம், சிறந்த பொறிமுறையாக அமையும் என்று தெரிவித்தள்ள ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்காக உருவாக்கப்பட்ட மாகாணசபை முறையினை முழுமையாக அமுல்ப்படுத்துவதற்கான சந்தர்ப்பமாகவும் அதனைப் பயன்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
கட்சி சாராத அரசாங்கம் ஒன்றினை அமைக்கும் முயற்சிக்கு ஆதரவளிக்குமாறு கேட்டு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அனுப்பிய கடிதத்திற்கான பதில் கடிதத்திலேயே ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகத்தினால் மேற்படி கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், கட்சி சாராத அரசாங்கத்தினை அமைக்கும் பிரதமர் விக்கிரமசிங்கவின் முயற்சிகளுக்கு ஈ.பி.டி.பி. கட்சி பூரணமான ஒத்துழைப்பினை வழங்கும் என்றும் குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அழைப்பினையேற்று, சவால்மிக்க தருணத்தில் பிரதமர் பதவியை பொறுப்யேற்றுக் கொண்டமைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீளும் நோக்கில் பல்வேறு நாடுகளுடனும் சர்வதேச நிதி நிறுவனங்களுடனும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் குறுகிய காலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள தொடர்பாடல்களுக்கும் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.