புதிய அரசமைப்பினூடாக தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் அதே நிலைப்பாட்டில் இருப்பதை நாம் வரவேற்கின்றோம்.
இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதியை செயற்படுத்தும் பணியில் இறங்கினால் நாம் முழுமையான ஆதரவை வழங்குவோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அரிய சந்தர்ப்பம்
‘தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு புதிய அரசமைப்பு மூலம் கிடைக்கும். ஒரு வருடத்துக்குள் இந்தப் பணிகள் முற்றுப்பெற வேண்டும் என்பதே எனது நோக்கம்’ என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.
அதேவேளை, ‘தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குக் கிடைத்த இந்த அரிய சந்தர்ப்பத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உள்ளிட்ட தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள் தவறவிடக்கூடாது.
அவர்கள் கட்சி, பேதமின்றி மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட வேண்டும்’ என்று பிரதமர் தினேஷ் குணவர்த்தன வலியுறுத்தியிருந்தார்.
இவர்கள் இருவரினதும் கருத்துக்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
தமிழர்களுக்கு தீர்வு! ஜனாதிபதிக்கு கிடைக்கும் இடம்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“புதிய அரசமைப்பை உருவாக்கவும், தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காணவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசுடன் இணைந்து பயணிக்கத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்நேரமும் தயாராகவே உள்ளது.
ஆனால், இந்த விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிகளை உடனடியாகச் செயற்படுத்தும் பணியில் இறங்க வேண்டும்.
அப்போதுதான் எமக்கும் அதில் பூரண நம்பிக்கை ஏற்பட்டு முழு ஆதரவை வழங்க முடியும். காலத்தை இழுத்தடிக்காமல் ஒரு வருடத்துக்குள் தமிழர்களுக்கு நிலையான தீர்வை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கினால் அவர் இலங்கை வரலாற்றில் தனித்துவமான இடத்தைப் பிடிப்பார்” என்றார்.