இலங்கை தமிழரசு கட்சியின் இளைஞர் அமைப்பின் மேலதிக செயலாளர் நிதன்ஷன் என்ற நபரை வெள்ளை வேனில் வந்த புலனாய்வு பிரிவினரால் கடத்த முயற்சிக்கப்பட்டதாக சாணக்கியன் ராஜபுத்திரன் ராசமாணிக்கம் என்ற பெயரில் நபரொருவரின் புகைப்படத்துடன் கூடிய டுவிட்டர் கணக்கில் தெரிவிக்கப்பட்டுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளதாவது,
கல்முனை பொலிஸ் பிரிவில் இலங்கை தமிழரசு கட்சியின் இளைஞர் அமைப்பின் மேலதிக செயலாளர் நிதன்ஷன் என்ற நபரை வெள்ளை வேனில் வந்த புலனாய்வு பிரிவினரால் கடத்த முயற்சிக்கப்பட்டதாக சாணக்கியன் ராஜபுத்திரன் ராசமாணிக்கம் என்ற பெயரில் நபரொருவரின் புகைப்படத்துடன் கூடிய டுவிட்டர் கணக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு இந்த தகவல் ஏனைய சமூக வலைத்தளங்களிலும் பகிரப்பட்டு வருகிறது.
சமூக வலைத்தளங்களில் உலாவரும் இந்த செய்தி தொடர்பில் கல்முனை பிரிவிற்கு பொறுப்பான மேலதிக பொலிஸ் அத்தியட்சகரினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணை அறிக்கைக்கு அமைய, கல்முனை – 2, வட்டவிதான வீதியில் வசிக்கும் அருள் ஞானமூர்த்தி நிதன்ஷன் என்ற நபரால் கடந்த 17 ஆம் திகதி பிற்பகல் வேலையில், ஒரு குழுவினரால் அவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தொடர்பிலும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த முறைப்பாட்டுக்கமைய முறைப்பாடளித்த நபர் மற்றும் அந்த சந்தர்ப்பத்தில் குறித்த வேனில் இருந்த இரு நபர்கள் வேனுடன் கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். வேன் சாரதி மற்றும் மற்றைய நபர் மருதமுனை பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் மோட்டார் சைக்கிள் உதிரிப்பாகங்களை விற்பனை செய்யும் நபர்கள் என்று தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த போது கடந்த 17 ஆம் திகதி பெரியநீலாவணி பிரதேசத்தில் அருள் ஞானமூர்த்தி நிதன்ஷன் என்ற நபர் மோட்டார் சைக்கிளில் குறுக்கு வீதியிலிருந்து பிரதான வீதிக்கு சென்ற போது வேனொன்றில் மேற்கூறப்பட்ட இருவரும் சென்றுள்ளனர்.
இதன் போது மோட்டார் சைக்கிளும் வேனும் ஒன்றுடன் ஒன்று மோதியதால் இவர்களுக்கடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. அதற்கமைய முறைப்பாட்டாளரால் கல்முனை பொலிஸ் நிலையத்தில் தான் தாக்கப்பட்டமை மற்றும் அச்சுறுத்தப்பட்டமை தொடர்பில் முறைப்பாடளித்துள்ளமையும் விசாரணைகளின் ஊடாகத் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளில், குறித்த வேன் சம்பவம் இடம்பெற்ற போது வேனை செலுத்திய நபருடைய தந்தையுடையது என்பதும், எந்த வகையிலும் புலனாய்வு பிரிவிற்கு உரித்துடைய வேன் அல்ல என்பதும் , அதில் பயணித்த நபர்கள் புலனாய்வு பிரிவினர் அல்ல என்பதும் , அவர்கள் சாதாரண வர்த்தகர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
மேலும் இந்த சந்தர்ப்பத்தில் அருள் நிதன்ஷன் என்ற நபர் எந்தவொரு வகையிலும் தாக்குதலுக்கு உள்ளாகவில்லை என்பதோடு , வாய்த்தர்க்கம் இடம்பெற்றமையின் காரணமாகவே அவரால் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
எனவே வெள்ளை வேனில் வந்த புலனாய்வு பிரிவினர் கடத்திச் செல்ல முயற்சித்துள்ளனர் என்று சாணக்கியன் ராஜபுத்திரன் ராசமாணிக்கம் என்ற பெயரில் நபரொருவரின் புகைப்படத்துடன் கூடிய டுவிட்டர் கணக்கிலும் , ஏனைய சமூக வலைத்தளங்களிலும் வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவையாகும்.
இது மக்களை திசை திருப்பும் வகையிலான தகவல் என்றும் இதுவரையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் மற்றும் உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பியமை தொடர்பிலான விசாரணைகளை கல்முனை பிரிவிற்கு பொறுப்பான மேலதிக பொலிஸ் அத்தியட்சகர் முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]