யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான மேயர் வேட்பாளராக இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் இம்மானுவேல் ஆர்னோல்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இது வதந்தி அல்ல; உண்மை. இந்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை.”
– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
வடக்கிலுள்ள ஒரே ஒரு மாநகர சபையான யாழ்ப்பாணம் மாநகர சபையின் தலைவர் பதவி இராஜதந்திர மதிப்புள்ள ஒரு பதவி. யாழ். மாவட்டத்தின் அடையாளமாகவும் விளங்கக்கூடியது. இத்தகைய பெருமைமிகு பதவியை அடைவதற்கான முயற்சியில் பலரும் போட்டியிட்டு வந்தனர். இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள்ளும் பலத்த போட்டி நிலவியது.
யாழ்ப்பாணம் வணிகர் கழக முன்னாள் தலைவரும் தற்போது வடக்கு மாகாண சபை உறுப்பினராக உள்ளவருமான இ.ஜெயசேகரம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சொலமன் சூ.சிறில், முன்னாள் மாநகர சபை உறுப்பினர் இராஜகுருதேவன், சிரேஷ்ட ஊடகவியலாளர் ந.வித்தியாதரன் ஆகியோர் இந்தப் போட்டியில் இருந்தனர். எனினும், யாழ். மாநகர சபைக்குள் வாழக்கூடிய மக்களின் பகுப்பாய்வு அடிப்படையில் ஆர்னோல்ட் தெரிவுசெய்யப்பட்டார்.
யாழ். மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக வடக்கு மாகாண உறுப்பினர் பதவியிலிருந்து விலகும் கடிதத்தை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானத்திடம் ஆர்னோல்ட் கையளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.