2018 – 19ம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டை நிதி அமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்து வருகிறார். அரசின் மொத்த வருவாள் 1.81 லட்சம் கோடி. செலவு ரூ 2.04 கோடி ஆகும். இதனால் பட்ஜெட் பற்றாக்குறை 23 ஆயிரத்து ரூ 176 கோடி என நிதி அமைச்சர் பட்ஜெட் தாக்கலின் போது தெரிவித்துள்ளார்.
நிதிஅமைச்சர் பன்னீர் செல்வம் தாக்கல் செய்யும் 8 வது பட்ஜெட் இதுவாகும். ஜி.எஸ்.டி., வரி விதிப்பு அமலான பிறகு வரும் முதல் பட்ஜெட் இது. ஜி.எஸ்.டி.-க்குப் பிறகு, மாநில அரசுக்கு அதிக வருவாய் தரும் வணிகவரி வருவாயில் பாதியை, மத்திய அரசுக்குத் தரவேண்டியுள்ளதால், இந்த ஆண்டில் வருவாய் குறையும் என கருதப்பட்டது. ஜி.எஸ்.டி மூலம், 2017 நவம்பர் வரை, 57,345 கோடி ரூபாய், தமிழகத்திற்கு கிடைத்துள்ளது. எனினும், இதர வருவாய்களில் முக்கியமான பத்திரப்பதிவு பெருமளவு குறைந்துள்ளது. அரசு ஊழியர்களுக்கு, ஏழாவது ஊதியக் குழு பரிந்துரை அடிப்படையிலான ஊதிய உயர்வால், கூடுதலாக, 14,719 கோடி ரூபாய் அரசுக்கு செலவினம் ஏற்பட்டுள்ளது. இவற்றுடன், 3.15 லட்சம் கோடி ரூபாயாக உள்ள மாநில கடன்சுமைக்கு, வட்டியாகவே மாதம் 10 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்த வேண்டி உள்ளது. இந்நிலையில், எப்படிப்பட்ட பட்ஜெட் வரும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வேளாண் சாகுபடி, வறட்சி போன்ற காரணங்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதனால். விவசாய நலத்திட்டங்களுடன், உச்ச நீதிமன்றம் கூறியபடி நிலத்தடி நீரை பயனுள்ளதாக பயன்படுத்த போதிய திட்டங்களும் இடம்பெற, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுமா என்ற எதிர்ப்பார்ப்பும் எழுந்துள்ளது.
பட்ஜெட்டில் 2018/19ம நிதியாண்டில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 9 சதவிகிதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. வரும் நிதியாண்டில் 3 லட்சம் இலவச வீட்டு மனை பட்டா வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு விட மேலும் 500 மையங்கள் திறக்கப்படும். தாமிரபரணி நம்பியாறு இணைப்புத் திட்டத்திற்கு ரூ 100 காடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் திட்டத்திற்கு பங்கு மூலதன உதவியாக ரூ 750 கோடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.