தமிழக அரசின் சாலைப் பணி ஒப்பந்ததாரருக்குச் சொந்தமான நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றுவருகிறது.
ரூபாய் நோட்டுத் தடை செய்யப்பட்டபிறகு இந்தியா முழுவதும் வருமான வரித்துறையினர் தொடர்ச்சியாக சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். குறிப்பாக தமிழகத்தில் வருமான வரித்துறையினர் தொடர்ச்சியாக சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சேகர் ரெட்டி, முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகனராவ், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோரின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகள் நடத்தப்பட்டது. வருமான வரித்துறையை மத்திய அரசு தனக்கு சாதமாகப் பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்தது.
இந்நிலையில், தமிழக அரசின் சாலைப் பணி ஒப்பந்ததாரர் தியாகராஜனுக்குச் சொந்தமான 3 நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். நேற்று இரவு முதல் இந்தச் சோதனை நடைபெற்றுவருகிறது. வருமானத்தைக் குறைத்துக் காட்டியது, வரி ஏய்ப்பு செய்தது உள்ளிட்ட புகாரின் அடிப்படையில் அவரது அலுவலகங்களில் சோதனை நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று இரவிலிருந்து நடைபெறும் சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. இருப்பினும் இதுகுறித்து அதிகாரிகள் உறுதி செய்யவில்லை.