தமிழக அரசியலில் திருப்பம்: மீண்டும் ஜெயலலிதா சமாதிக்கு முன்னால் பன்னீர்செல்வம் !
தமிழக அரசியலில் நொடிக்கு நொடி பரபரப்பு ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. கடந்த சில மாதங்களாக ஏற்பட்ட இந்தப் பரபரப்பு இன்னமும் முடிவுறவில்லை.
கடந்த டிசம்பர் 5ம் திகதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின்னர் ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சரானார். எனினும் கடந்த வாரம், அவர் தன்னுடைய தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக அறிவித்தார்.
இந்நிலையில் இரண்டு நாட்களுக்குப் பின்னர் தன்னைக் கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்யச் சொன்னார்கள் என்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு முன்னால் சுமார் 40 நிமிட நேரம் தியானம் செய்தார். இதையடுத்து சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்க அதிமுக இரண்டாக பிளவுபட்டது.
தற்போது அதிமுக சட்டசபை குழு தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க அழைக்கக் கூடாது; என்னைத்தான் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்.
எடப்பாடி கொடுத்த ஆதரவு எம்.எல்.ஏக்கள் பட்டியலில் பலர் என்னுடைய ஆதரவாளர்கள் என ஆளுநரிடம் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார்.
இதனால் ஆளுநரின் முடிவு என்ன? என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இன்று இரவு திடீரென ஜெயலலிதா நினைவிடத்துக்கு முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வந்துள்ளார்.
பன்னீர் செல்வம் வந்ததைத் தொடர்ந்து, ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவும் மெரினா வந்தடைந்தனர்.
இருவரும் இணைந்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியதுடன், கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் என அனைவரும் வணக்கம் செலுத்தியிருந்தனர்.
இதற்கிடையில் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவிற்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தீபாவும், பன்னீர்செல்வமும் சந்தித்துப் பேசியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.