தமிழகம் மற்றும் கேரளாவில் இன்றும்(டிச.,01) கனமழை கொட்டும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிர புயலாக மாறியதால், திருநெல்வேலி, கன்னியாகுமரி, துாத்துக்குடி, கடலுார் மாவட்டங்களில், மிக கன மழை பெய்து வருகிறது. இன்றும், ராமநாதபுரம் மாவட்டம் உட்பட பல மாவட்டங்களில், மிக கன மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் சில இடங்களில், கன மழை பெய்யலாம் என, கூறப்பட்டுள்ளது.
கேரளாவில், திருவனந்தபுரம், ஆலப்புழை, கோட்டயம், இடுக்கி, பத்தனந்திட்டா மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த புயல், லட்சத்தீவில் மையம் கொண்ட பின் கடலிலேயே வலுவிழக்கும். ஆனால், ‘கடல் சூழல் சாதகமாக இருந்தால், வட கிழக்காக கோவா, மும்பை கடற்கரை நோக்கி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நகரும்’ என, அமெரிக்காவின் சர்வதேச புயல் எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.