தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஊரடங்கு தடை காரணமாக கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கி இருக்கிறது.
இந்த மாத தொடக்கத்தில் இருந்தே கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே சென்றது. கடந்த 12-ந் தேதி கொரோனா தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்தது. இதன் பிறகு தினமும் நோயின் வேகம் அதிகரித்துக் கொண்டே சென்றது.
அடுத்த ஒரு வாரத்தில் தினசரி பாதிப்பு 35 ஆயிரத்தை கடந்தது. கடந்த 20-ந் தேதி 35 ஆயிரத்து 579 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர்.
அதற்கு மறுநாள் மே 21-ந் தேதி 36 ஆயிரத்து 184 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதுவே தமிழகத்தில் தினசரி நோய் தொற்றின் அதிகபட்ச பாதிப்பு ஆகும். இதன் பிறகு 22, 23 ஆகிய இரண்டு நாட்களும் ஊரடங்கில் முழு தளர்வு அறிவிக்கப்பட்டு 24-ந் தேதி முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
ஊரடங்கு தளர்வில் இருந்த 2 நாட்களிலும் தினசரி பாதிப்பு 36 ஆயிரத்தை நெருங்கி இருந்தது.
இதன் பின்னர் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறையத் தொடங்கியது. முழு ஊரடங்கு அமலுக்கு வந்த 24-ந் தேதியில் இருந்து தினசரி நோய் தொற்று கணிசமாக குறைந்து வருகிறது.
24-ந் தேதி அன்று 34 ஆயிரத்து 867 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இது மறுநாள் (25-ந் தேதி) 34 ஆயிரத்து 285 ஆக குறைந்தது.
26-ந் தேதியன்று தினசரி பாதிப்பு மேலும் குறைந்தது. அன்று 33 ஆயிரத்து 764 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர்.
கடந்த 3 நாட்களாக நோயின் தாக்கம் படிப்படியாக குறைந்துள்ளது. மே 27-ந் தேதியன்று 33 ஆயிரத்து 361 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் (28-ந் தேதி) 31 ஆயிரத்து 79 பேரும், நேற்று (29-ந் தேதி) 30 ஆயிரத்து 16 பேரும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இதன் மூலம் கொரோனா தொற்று தமிழகத்தில் வெகுவாக குறைந்துள்ளது.
கடந்த 12-ந் தேதியன்று தினசரி பாதிப்பு 30 ஆயிரம் அளவுக்கு இருந்தது. அதன் பின்னர் கொரோனாவின் தாக்கம் உயர்ந்து கொண்டே சென்றது. அதிகபட்சமாக மே 21-ந் தேதியன்று 36 ஆயிரத்து 184 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து டெல்லியைப் போன்று 40 ஆயிரத்தை கடந்துவிடும் என்ற அச்சம் ஏற்பட்டது.
ஆனால் முழு ஊரடங்கு கொரோனாவின் தாக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. 18 நாட்களுக்கு பிறகு கொரோனா தொற்று குறைந்து மீண்டும் 30 ஆயிரம் அளவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் படிப்படியாக நோய் தொற்று குறைந்து வருவது மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் இடையேயும் சற்று ஆறுதலை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து குறையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் குணமடைந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நேற்று அதிகபட்சமாக 31 ஆயிரத்து 759 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 18-ந் தேதியன்று 21 ஆயிரத்து 362 பேர் குணமாகி வீடு திரும்பினர். இந்த எண்ணிக்கை அடுத்தடுத்த நாட்களில் உயர்ந்து கொண்டே வந்துள்ளது. 19-ந் தேதியன்று 23 ஆயிரத்து 863 பேர் டிஸ்சார்ஜ் ஆனார்கள்.
20-ந் தேதி 25 ஆயிரத்து 368 பேரும், 21-ந் தேதி 24 ஆயிரத்து 478 பேரும், 22-ந் தேதி 25 ஆயிரத்து 776 பேரும் குணமடைந்து வீடு திரும்பினர்.
23-ந் தேதி 25 ஆயிரத்து 196 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர். 24-ந் தேதி 27 ஆயிரத்து 26 பேரும், 25-ந் தேதி 28 ஆயிரத்து 745 பேரும், 26-ந் தேதி 29 ஆயிரத்து 717 பேரும், 27-ந் தேதியன்று 30 ஆயிரத்து 63 பேரும், 28-ந் தேதி 31 ஆயிரத்து 255 பேரும் குணமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் இதுவரை 20 லட்சத்து 39 ஆயிரத்து 716 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 17 லட்சத்து 6 ஆயிரத்து 298 பேர் அதில் இருந்து மீண்டுள்ளனர். அதேநேரத்தில் 23 ஆயிரத்து 261 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருக்கிறார்கள். இதில் சென்னையில் மட்டும் 6 ஆயிரத்து 914 பேர் உயிரிழந்துள்ளனர்.