தமிழகத்தில் கூகுள் மையம் அமைக்குமாறு கூகுள் நிறுவனத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தமிழக தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
கூகுள் இந்தியாவின் தலைமை இயக்குநர் சேத்தன் கிருஷ்ணசாமி இன்று தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டனைச் சந்தித்தார். தலைமைச் செயலகத்தில் இவர்களின் சந்திப்பு நடைபெற்றது. சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மணிகண்டன், “மும்பை, பெங்களூரு, ஹைதராபாத்தில் செயல்படுவதுபோல் தமிழகத்தில் கூகுள் மையம் அமைக்கத் தமிழக அரசின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் இயற்கைப் பேரிடர் காலத்தில் தடைகள் ஏற்படாதவாறு இணையதள சேவைகளை வழங்கும் வகையில் தமிழகத்துக்கு கூகுள் பலூன் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சுமார் 20 கிலோமீட்டர் தொலைவுக்கு இணையதள வசதிகள் வழங்க முடியும். தமிழக கிராமப்புற பெண்களுக்கு கணினி பயிற்சி அளிக்கவும் அவர்களுக்கு வழங்கப்படும் இணையதள சேவையை அதிகரிக்கவும் கூகுளுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது” என்றார்.