ஏ.ஆர்.ரஹ்மானின், 25 ஆண்டு கால இசைப்பயணத்தை முன்னிட்டு அவருடன் இணைந்து தமிழகத்தில் இருந்து ஏழு புதிய குரல் தேடல் என்ற நிகழ்ச்சியை செவன் அப் நிறுவனம் நடத்துகிறது. பலகட்ட போட்டிகளுக்குப் பின் தேர்வான ஏழு பேருடன், வரும் 12-ம் தேதி சென்னையில் நடைபெறும் இசை நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான் பாட உள்ளார். அது குறித்துப் பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், தமிழகத்திற்கு நல்ல தலைவன் கிடைக்க வேண்டும்; அதற்கு எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் எனக் கூறினார்.
புதிய குரல் தேடல் நிகழ்ச்சி குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் கூறியதாவது, இசை பயணத்தில், “25 ஆண்டுகளை முடித்து விட்டோமா என திரும்பி பார்த்தால் வயதானது போலாகி விடும். இனிமேல் தான் நிறைய செய்ய வேண்டியுள்ளது.
சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்துவது சந்தோஷமாக உள்ளது. வரும் 12-ம் தேதி 99% தமிழ் பாடல்களையே, மூன்று மணி நேரம் பாடப்போகிறோம். எதிர்கால தலைமுறையினருக்கு யூ-ட்யூப் போன்ற தளங்கள் பயனுள்ளதாக உள்ளன. நான் கூட சில சமயம் யூ-ட்யூபிலிருந்து தான், நல்ல குரல்களை தேடுகிறேன்.
இந்த இசை நிகழ்ச்சியால் கிடைக்கும் நிதி விவசாயிகளுக்கும், ஏழைக் குழந்தைகளின் கல்விக்கும் பயன்பட உள்ளது. அதனால், எல்லோருடைய ஆதரவும் இதற்குத் தேவை. நான் தனிமை விரும்பி என்பதால் அரசியலில் நாட்டமில்லை.