தன்னை கொலை செய்ய முயற்சித்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பதற்காக தன்னுடைய கண் தனக்கு மீளக் கிடைக்கப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
கைதிகள் விடுவிப்பு
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை படுகொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்ட மூன்று கைதிகள் உட்பட 8 தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் பொது மன்னிப்பு வழங்கியிருந்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், என்னை கொலை செய்ய முற்பட்ட சந்தேகநபருக்கு கொழும்பு – கொட்டாஞ்சேனை ஆலய பூசகர் ஒருவரும் அவரது மனைவியும் உதவியதாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 20 ஆண்டுகள் அவர்கள் சிறை தண்டனை அனுபவித்துள்ளனர். அவர்கள் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர் என்பதற்காக என்னுடைய கண் எனக்கு மீளக் கிடைக்கப் போவதில்லை. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டப் போவதுமில்லை.
விடுதலை செய்வது தொடர்பான நிலைப்பாடு
அவர்கள் சிறையிலடைக்கப்பட்டு சுமார் 8 ஆண்டுகள் கடந்த போதே அப்போதைய ஜனாதிபதியிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்து அவர்களை விடுதலை செய்யுமாறு கோருவதற்கு எண்ணியிருந்தேன்.
இந்நிலையிலேயே அண்மையில் ஜனாதிபதியின் செயலாளர் தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்த தீர்மானம் தொடர்பில் தெரிவித்தார். அவர் என்னிடம் கேட்ட அந்த சந்தர்ப்பத்திலேயே நான் சரி என்று பதிலளித்தேன்.
அந்த தீர்மானத்தை நான் விரும்புவதாகவும் அவரிடம் தெரிவித்தேன். அவர்களுக்கு புனர்வாழ்வளித்தேனும், அவர்கள் செய்த செயல் தவறு என்பதை உணர்த்த வேண்டும் என்பதே எனது விருப்பமாகும்.
என் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சில தினங்களின் பின்னர் உரையாற்றும் போதும், பதவிப் பிரமாண உரையின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்த இளைஞர், யுவதிகளை எம்முடன் இணைந்து பயணிக்குமாறு அழைப்பு விடுத்தேன் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது என குறிப்பிட்டுள்ளார்.