இனியும் கண்ணீர் வேண்டாம் தன்ஷிகா.. உங்களிடம் இருக்கிறது வெற்றிப் புன்னகை.. சிரித்தபடி இருங்கள் என்று தன்ஷிகாவுக்கு ஓவியா அறிவுரை வழங்கியுள்ளார்.
‘விழித்திரு’ பத்திரிகையாளர் சந்திப்பில் தன்ஷிகா பேசும்போது, மேடையிலிருந்த அனைவரையும் பற்றி பேசிவிட்டு டி.ராஜேந்தரை பற்றி குறிப்பிட மறந்துவிட்டார்.
இதனைத் தொடர்ந்து பேசவந்த டி.ராஜேந்தர், தன்ஷிகாவை கடுமையாக சாடினார். இடையே தன்ஷிகா “மன்னிக்க வேண்டும். வேண்டுமென்றே குறிப்பிடாமல் இல்லை. மறந்துவிட்டேன். உங்கள் மீது எனக்கு மிகப்பெரிய மதிப்புள்ளது” என்று கூறினார். ஆனாலும், டி.ராஜேந்தர் இறுதிவரை கடுமையாக சாடவே, தன்ஷிகா மேடையிலே அழத் தொடங்கினார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவாகியுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக தன்ஷிகாவுக்கு ஓவியா அறிவுரை வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக ஓவியா தன் ட்விட்டர் பக்கத்தில், ”அன்பு தன்ஷிகா.. எதிர்பாராமல் நிகழ்ந்த சம்பவத்துக்கு, உங்கள் மீதான மிக முரட்டுத்தனமான எதிர்வினை அது.. மேடை நாகரிகம் என்பதை விட, ஒரு பெண்ணிடம் அன்போடும் கண்ணியத்தோடும் நடந்துகொள்வது முக்கியம் என்பதை இன்னும் சிலர் புரிந்து கொள்ளவில்லை என்பது பரிதாபம்.
ஒரு பெண் அவமானப்படுத்தும்போது அவருடன் மேடையில் இருக்கும் இரு ஆண்கள் சிரித்துக் கொண்டிருப்பது அதைவிட எரிச்சலான விஷயம்.. இனியும் கண்ணீர் வேண்டாம் தன்ஷிகா.. உங்களிடம் இருக்கிறது வெற்றிப் புன்னகை.. சிரித்தபடி இருங்கள்” என்று ஓவியா அறிவுரை வழங்கி உள்ளார்.