புனரமைப்பு பணிகள் எட்டிப்பார்க்காத குன்றும் குழியுமான வீதிகளில் நடந்து சென்று குத்துச்சண்டை பயின்ற பெண்!
தாயின் வயிற்றில் ஐந்து மாத சிசுவாக இருக்கும் போதே தந்தையைப் பறிகொடுத்த இந்துகாதேவி
தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வந்த நிலையில் இந்துகாதேவியின் தாயார் மத்தியகிழக்கு நாட்டிற்குச் சென்று தன்னை வருத்தி உழைத்த பணத்தின் பெறுமதியை உணர்ந்து தாத்தா, பாட்டியின் அரவணைப்பில் சிறுவயது வாழ்க்கையை கழித்தார்.
வவுனியா சிதம்பரபுரம் அவரது சிறுபராயத்தை புடம்போட்ட மண். தாயார் மத்திய கிழக்கில் இருந்து திரும்பியிருந்த நிலையில் சிதம்பரபுரத்தில் இருந்து இடம்பெயர்ந்து வறுமையும் போரும் கிழித்துப் போட்டு விட்ட முல்லைத்தீவு நோக்கி இவர்கள் நகர்ந்தனர் . தமக்கான காணியில் இவர்கள் பெருக்கிக்கொண்ட செல்வத்தோடு சிறுக சிறுக வாழ்க்கையின் படிகளைத் தாண்டியது இந்துகாதேவியின் குடும்பம் .
இடர்களைத் தாண்டி இந்துகாதேவி தனக்கான துறையில் தன்னை புடம் போட்டார். குத்துச் சண்டை போட்டி அவரை அணைத்துக்கொண்டது.
தினமும் கரடுமுரடான பாதையூடான பயணமும் , மாங்குளம் ஒட்டுசுட்டான் பிரதான வீதியிலிருந்து வரும், வருமென காத்திருந்தும் பறந்துபோகும் பேருந்துகளுக்கான நீண்ட நேர காத்திருப்புக்களுமென தங்கம் பட்டை தீட்டப்பட்ட கதைகளோ ஏராளம்!
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டிசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் கரிப்பட்ட முறிப்பு புதியநகர் கிராமத்தில் கரிப்பட்ட முறிப்பு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் தனது ஆரம்பக்கல்வியை ஆரம்பித்த இந்துகாதேவி,தனது சிறுபராயம் முதலே சாதிக்க வேண்டுமெனும் உத்வேகமும் நிறைந்தே காணப்பட்டார்.
பாடசாலை மட்டம், வலயமட்டம், மாவட்டமட்டமென பல நிகழ்வுகளில் பங்கு கொண்டு பரிசில்களையும்,பாராட்டுக்களையும் பெற்றார். படிப்பிலும் சுட்டியான இந்துகாதேவி உயர்தரக் கல்வியினை ஒட்டிசுட்டான் மகாவித்தியாலத்தில் தொடர்ந்தார்.
சோதனைகள் ஒருபுறம் தொடர்ந்த வண்ணம் இருந்தாலும், சாதனைகளை நோக்கி பயணித்த இந்துகாதேவியிடம் உயர்தர வகுப்பின் இறுதியாண்டிலே தேடி வந்தது குத்துச்சண்டை போட்டிக்கான வாய்ப்பு.
18.01.2022 அன்று பாகிஸ்தான் லாகூரில் பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு இடையில் நடைபெற்ற 2 ஆவது சவேட் குத்துச்சண்டை சம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற இந்துகாதேவி, 25 வயதுக்குட்பட்ட
50 – 55 கிலோகிராம் எடைப்பிரிவில் இடம்பெற்ற குத்துச்சண்டை போட்டியில் பங்கு கொண்டு தங்கத்தை தனதாக்கிக்கொண்டார்.
அடுத்ததாக ஆசிய சம்பியன்ஷிப் போட்டியிலும், அடுத்து ஒலிம்பிக்கிலும் வெல்ல வேண்டும் என்ற இலக்கை நோக்கி பயணிக்கும் இந்துகாதேவி, சாதிக்க நினைப்பவர்களுக்கு வறுமை என்றும் ஒரு தடையல்ல என தடைகளை உடைத்தெறிந்து தடம்பதித்து நிரூபித்துள்ளார் .
தனது இலக்குகளை நோக்கி பயணிக்கும் சகோதரி இந்துகாதேவி தனது இலக்குகள் அனைத்திலும் வெற்றி வாகை சூடி இன்னும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]