உடல்நலத்தை உறுதி செய்வதற்கு நடிகர் தனுஷ் சில டிப்ஸ்களை வழங்கியுள்ளார்.
சென்னை பெரும்பாக்கத்திலுள்ள கிலெனீகிள்ஸ் குளோபல் மருத்துவமனையில் 24 மணி நேர ஆஞ்சியோ சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க விழாவில் நடிகர் தனுஷும் கலந்துகொண்டார். அப்போது உடல்நலம் குறித்தும், இருதய நலம் குறித்தும் தனுஷ் பேசினார். அவர் பேசுகையில், “மாரடைப்பு, நெஞ்சு வலி வராமல் இருப்பதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு இருக்க வேண்டும். சரியான உணவு, சரியான தூக்கம், சரியான உடற்பயிற்சி ஆகியவை மிகவும் முக்கியம். உடலுக்கு வேலை கொடுக்காமல் இருப்பதால் சோம்பேறி ஆகிவிடுகிறோம்.
உடற்பயிற்சி என்பது முற்காலத்தில் நம் வாழ்வின் அங்கமாக இருந்தது. தொழில்நுட்பம் மேம்பட மேம்பட நாம் சோம்பேறிகளாக ஆகிக்கொண்டிருக்கிறோம். சோம்பேறிகளாக மாறும்போது நோய்களும் வந்துவிடுகின்றன.வெளியே சென்று உணவகங்களில் உணவு சாப்பிட்ட காலம் போய் வீட்டிலிருந்துகொண்டே ஆன்லைனில் உணவை ஆர்டர் செய்து சாப்பிடும் காலம் வந்துவிட்டது. இதுவே பல நோய்கள் நம்மை தாக்குவதற்கு காரணமாகிவிடுகிறது.
வெளியே உணவகங்களில் எந்த எண்ணெய்யில் சமைக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாது. வீட்டு உணவே உடல்நலத்திற்கு உகந்தது. உடல்தான் கோயில், மனதுதான் தெய்வம். அனைவரும் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். இந்த சிகிச்சை பிரிவு தொடக்கம் மிகவும் அற்புதமானது. இதற்காக நான் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பேசினார்.