ஈழம், தனிநாடு என்று பேசிப்பேசி இனியும் தமிழர்களை அழித்துவிட வேண்டாம். 30 ஆண்டுகால யுத்தத்தில் ஒரு பரம்பரையே அழிந்துள்ளது என நீதி அமைச்சர் அலி சப்ரி புலம்பெயர் தமிழ் அமைப்புக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கல்விமான்கள், புத்திஜீவிகள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதே தவறை இனியும் முன்னெடுக்க வேண்டாம். பிரச்சினைகளை பேசித் தீர்ப்போம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஜெனிவாவில் அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருக்க முடியும். அதனால் இங்கு ஒன்றும் நடக்கப் போவதில்லை. இவ்வளவு காலமும் இவ்வாறான அறிக்கைகள் வெளிவந்துகொண்டு தானே இருந்தன. இனியும் அறிக்கை வெளியிடப்படும். அது கடுமையாக இருக்கும் என்பதற்காக இங்கு எதுவுமே மாறப் போவதில்லையே.
மாறாக மக்கள் மத்தியில் வைராக்கியமும் கோபமும் அதிகரித்துக் கொண்டு அதில் சிலர் அரசியல் செய்து கொண்டிருக்க முடியுமே தவிர வேறு எதுவும் நடக்கப் போவதில்லை. எனவே இந்த பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.
நல்லாட்சியில் செய்ய முடியாத பல விடயங்களை நாம் செய்துள்ளோம். விடுதலைப் புலிகள் பலர் விடுவிக்கப்பட்டனர். பயங்கரவாத தடைச் சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வந்துள்ளோம். சிங்கள மக்களின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ள போதிலும் கூட இந்த விடயங்களை கருத்திற் கொண்டு செயற்படுகின்றோம்.
வெளிநாடுகளில் உள்ள தமிழ் அமைப்புக்கள் ஜெனிவாவை இலக்கு வைத்து கூப்பாடு போட்டுக் கொண்டிருக்க முடியும். ஆனால் இங்கு மக்களுக்கு சகல அடிப்படை வசதிகளையும் அரசாங்கமே செய்து கொடுக்கின்றது. மாறாக அங்கிருந்து கூச்சல் போடும் நபர்கள் அல்ல.
சர்வதேச அமைப்புகள் மூலமாக இவர்கள் என்ன செய்தாலும் அதனால் இங்குள்ள தமிழ் மக்ககு்கு தீர்வு கிடைக்காது. இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்றால் இங்கிருந்து தான் பேச வேண்டும்.
தமிழ் மக்களை பாதுகாக்கும் உண்மையான நோக்கம் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு இருக்கின்றது என்றால் அங்கிருந்து வெறுமனே கத்திக் கொண்டு இருக்காது இங்கு வாருங்கள்.
தமிழர் பகுதிகளில் முதலீடுகளை செய்யுங்கள். வேலைவாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுங்கள். தரமான பாடசாலைகளை உருவாக்கி இங்குள்ள தமிழர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]