தனி ஆளாக மொத்த அவுஸ்திரேலியாவை கதி கலங்க வைத்த மில்லர்!
அவுஸ்திரேலியா அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில் இரு அணிகளுக்கிடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி டர்பனில் நடைபெற்றது.
இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணியின் துவக்க ஆட்டக்காரர்களான வார்னரும், பின்சும் ஆரம்பத்தில் இருந்தே அதிரடி காட்டத் தொடங்கினர்.
இதனால் அணியின் ஓட்டம் மளமளவென உயர அவுஸ்திரேலியா அணி 11.4 ஓவர்களில் 100 ஓட்டங்கள் குவித்தது.
அரை சதம் கடந்து சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த பின்ச் 53 ஓட்டங்கள் எடுத்த போது இம்ரான் தாகிர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இதற்கு அடுத்து வந்த ஸ்மித்தும், வார்னரும் ஒன்று சேர்ந்து தென் ஆப்பிரிக்காவின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர்.
தங்களுடைய அதிரடி ஆட்டத்தால் இருவரும் சதங்கள் கடந்தனர். வார்னர் 117 ஓட்டங்களிலும், ஸ்மித் 108 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
இறுதியாக அவுஸ்திரேலியா அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 371 ஓட்டங்கள் குவித்தது.
தென் ஆப்பிரிக்கா தரப்பில் ஸ்டைன் 2 விக்கெட்டும், இம்ரான் தாகிர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
கடின இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்கா அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் குயிண்டன் டி காக்கும், ஆம்லாவும் சிறப்பான துவக்கத்தை தந்தனர்.
சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த ஆம்லா 45 ஓட்டங்களில் ஹாஸ்டிங்ஸ் பந்து வீச்சில் ஆட்டமிழக்க, அடுத்த வந்த வீரர்களும் அதிரடி காட்ட முயன்று சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
இவர்களுக்கு அடுத்து வந்த டேவிட் மில்லர் துவக்கத்தில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவருக்கு இணையாக துவக்க வீரர் குயின்டன் டி காக்கும் சிறப்பாக ஆடி வந்தார்.
டி காக் இக்கட்டான கட்டத்தில் 70 ஓட்டங்கள் எடுத்த போது வெளியேறினார், இதனால் அவுஸ்திரேலியா அணியின் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எழுந்தது.
ஆனால் அவுஸ்திரேலியா அணியின் கனவை டேவிட் மில்லர் புதைதார். அவுஸ்திரேலியா பந்து வீச்சாளர்களை கதிகலங்க வைத்தார். ஒவருக்கு ஒரு பவுண்டரி அல்லது சிக்ஸர் என இறுதி கட்டத்தில் வானவேடிக்கை நிகழ்த்தினார்.
இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 49.2 ஓவர்களில் 372 ஓட்டங்கள் குவித்து அபார வெற்றி பெற்றது.
தோல்வியின் பிடியில் இருந்த தென் ஆப்பிரிக்கா அணியை வெற்றி பெறச் செய்த டேவிட் மில்லர் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார். இவர் 79 பந்துகளில் 118 ஓட்டங்கள் குவித்தார்(10 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள்)
5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை தென் ஆப்பிரிக்கா அணி 3-0 என்ற கணக்கில் வென்று தொடரை கைப்பற்றியுள்ளது.