நாட்டில் தொடர்ந்து நிலவிவரும் பதற்ற நிலை மற்றும் டீசலுக்கான தட்டுப்பாடு காரணமாக தனியார் பேருந்து சேவைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றது.
இதன் காரணமாக 14 ஆம் திகதி வியாழக்கிழமை 10 வீதமான பஸ்கள் மாத்திரமே சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபையின் சுமார் 3,000 பஸ்கள் நேற்றைய தினம் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாதாரண நாட்களில் இலங்கை போக்குவரத்து சபையால் 5000 பேருந்துகளின் சேவையில் ஈடுபடுத்தபடுத்தப்படும். ஆனால் பயணிகள் மற்றும் ஊழியர்களின் வருகை குறைவடைந்துள்ளமை காரணமாக 14 ஆம் திகதி சுமார் 3000 பஸ்கள் மாத்திரமே சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் பிற்பகலிலும் ரயில்கள் வழமை போன்று இயங்கும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்திருந்தது. ரயில் வழமை போன்று இயங்கியதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பில் 14 ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதால் பொதுப் போக்குவரத்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே காணப்பட்டதால் மக்கள் தங்கள் வீடுகளுக்கு செல்வதில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.