தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அழகுக்கலை நிபுணர் சந்திமால் ஜயசிங்கவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துக் கொண்டதாக மேலும் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அழகுக்கலை நிபுணர் சந்திமால் ஜயசிங்கவின் பிறந்தநாள் கொண்டாட்டம் கொழும்பிலுள்ள – நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்றது. இந்த கொண்டாட்டத்தில் கலந்துக் கொண்டதாக மேலும் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பில் அழகுக்கலை நிபுணர் சந்திமால் ஜயசிங்க மற்றும் நடிகை பியுமி ஹங்சமாலி ஆகியோர் கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று இது தொடர்பில் பெண்ணொருவர் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டிருந்ததுடன் , இன்று புதன்கிழமை பெண்ணொருவர் உட்பட மேலும் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.