தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டமூலத்தை இரண்டாவது மதிப்பீட்டுக்குப் பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கு தகவல்தொழில்நுட்ப அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் நேற்று (08) அனுமதி வழங்கப்பட்டது.
இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை, அபிவிருத்தி கூட்டிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சரும், டிஜிட்டல் தொழிநுட்பம் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான நாமல் ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற தகவல்தொழில்நுட்ப அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே இந்த அனுமதி வழங்கப்பட்டது.
இந்த அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் தலைவராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ காணப்படுகிறார்.
தனிப்பட்ட தரவைச் செய்முறைப்படுத்துவதனை ஒழுங்குபடுத்துவதற்காக ஏற்பாடு செய்வதற்கும், தனிப்பட்ட தரவைப் பாதுகாத்தல் தொடர்பாகத் தரவுடன் தொடர்புபட்டோரின் உரிமைகளை அடையாளங்காண்பதற்கும் பலப்படுத்துவதற்கும்; தரவுப் பாதுகாப்பு அதிகாரசபையைப் பெயர் குறிப்பதற்கு ஏற்பாடு செய்வதற்கும்; அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநேர்விளைவான கருமங்களுக்காக ஏற்பாடுசெய்வதற்குமானதொரு சட்டமூலமாக இது அமையும்.
இந்த அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான பிரசன்ன ரணவீர, ஜானக வக்கும்புர, தேனுக விதானகமகே மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான மயந்த திஸாநாயக, யதாமினி குணவர்தன, அரவிந்த குமார், கலாநிதி திலக் ராஜபக்ஷ, வீரசுமன வீரசிங்ஹ ஆகியோர் கலந்துகொண்டனர்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]