பிரபல கன்னட நடிகர் உபேந்திரா. தமிழிலும் சத்யம் உள்பட சில படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த பார்லிமென்ட் தேர்தலில் மதசார்பற்ற ஜனதா தள வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். “தனது நண்பர்களுக்காக பிரச்சாரம் செய்ததாகவும், தனக்கு அரசியல் ஆசை எதுவும் இல்லை” என்றும் அப்போது அவர் தெரிவித்தார்.
ஆனால் தனது டுவிட்டர், பேஸ்புக்கில் கமல்ஹாசன் போன்று நாட்டு நடப்புகளைப் பற்றி கருத்து கூறி வந்தார். தற்போது அவர் தனிக்கட்சி தொடங்கி அரசியலில் குதிக்கப்போவதாக அறிவித்துள்ளார்.
பெங்களூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது: மக்களை அரசு தொடர்ந்து ஏமாற்றுகிறது, ஆட்சியாளர்கள் மக்களுக்கு சேவை செய்ய வேண்டியவர்கள். ஆனால் அவர்கள் முதலாளியாக இருந்து கொண்டு மக்களை வேலை வாங்குகிறார்கள். கல்வி, சுதாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கூட செய்து கொடுக்காமல் மக்கள் வரிப்பணத்தை கொள்ளை அடிப்பதிலும், கூறு போடுவதிலும் கவனம் செலுத்துகிறார்கள்.
எனவே மக்களுக்கு நேர்மையாக பணியாற்ற அரசியலில் குதிக்க இருக்கிறேன். எந்த கட்சியிலும் சேர மாட்டான் தனியாக கட்சி தொடங்குவேன். கட்சியின் பெயர், கொடி, சின்னத்தை விரைவில் அறிவிப்பேன். இது தொடர்பாக மக்களிடம் ஆலோசனை கேட்டு வருகிறேன். வருகிற சட்டமன்ற தேர்தில் அனைத்து தொகுதிகளும் போட்டியிடுகிற வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது என்றார்.
உபேந்திராவின் இந்த அறிவிப்பு கர்னாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.