பிரிட்டிஸ் பிரதமர் பொறிஸ்ஜோன்சனை பதவியிலிருந்து நீக்குவதா என்பது குறித்த அவரது கட்சியினர் இன்று தீர்மானிக்கவுள்ளனர்
இது தொடர்பான இரகசிய வாக்கெடுப்பில் கென்சவேர்ட்டிவ் கட்சியினர் இன்று வாக்களிக்கவுள்ளனர்.
பார்ட்டிகேட் விவகாரத்தை தொடர்ந்தே பொறிஸ்ஜோன்சனின் தலைமைத்துவத்தின் மீது கேள்வி எழுந்துள்ளது.
பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற கொரோன வைரஸ் முடக்கல் கால களியாட்ட நிகழ்வுகள் குறித்து சூ கிரே தனது அறிக்கையை வெளியிட்டதை தொடர்ந்து அரசாங்கத்தின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் சீற்றம் அதிகரித்து வந்துள்ள நிலையில் பொறிஸ்ஜோன்சனை பதவி விலக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்து கென்சவேர்ட்டிவ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் தலைமையை கேட்டுக்கொண்டுள்ளனர்.
எனினும் அமைச்சர்கள் பொறிஸ்ஜோன்சனிற்கு ஆதரவாக உள்ளனர்.
கிரேயின் அறிக்கை வெளியானதை தொடர்ந்து கடந்த ஒரு வாரகாலமாக பிரதமரின் எதிர்காலம் குறித்து சந்தேகங்கள் வெளியான நிலையில் நம்பிக்கையில்லாதீர்மானம் குறித்த அறிவிப்புவெளியாகியுள்ளது.
முடக்கல் காலத்தில் பிரதமரின் அலுவலகத்தில் களியாட்ட நிகழ்வுகள் இடம்பெற்றமை குறித்த இடைக்கால அறிக்கை ஜனவரியில் வெளியானதை தொடர்ந்து பிரதமர் பதவி விலகவேண்டும் என்ற வேண்டுகோள்கள் அதிகரிக்க ஆரம்பித்தன.
எனினும் கடந்த வாரம் வெளியான முழுமையான அறிக்கை கொவிட் விதிமுறைகள் பெருமளவில் மீறப்பட்டுள்ளதை அம்பலப்படுத்தியுள்ளது – இதனை தொடர்ந்து பொறிஸ்ஜோன்சன் பதவி விலகவேண்டும் என்ற வேண்டுகோள் தீவிரமடைந்துள்ளது.