பிரித்தானியாவில் குடிக்கு அடிமையான வீடற்ற நபர் ஒருவருக்கு அடைக்கலம் கொடுத்து அவரின் உயிரை காப்பாற்றிய விடுதிக்கு கைமாறாக அந்நபர் கிறிஸ்துமஸ் பரிசுகள் வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Boyce Owen என்னும் 54 வயது நபர், குடிக்கு அடிமையாகி வீடற்று இருந்தார். கடந்த ஆண்டு அவருக்கு, Derby நகரில் உள்ள Centenary House என்னும் விடுதி ஒன்று அடைக்கலம் கொடுத்தது.
அத்துடன் தினமும் ஒரு மணிநேரத்திற்கு எட்டு கேன் என்ற அளவில் மது அருந்தி வந்த Boyceயை, ஒரு கேன் என்ற அளவில் மாற்றி, அவரை குடிப்பழக்கத்திலிருந்து மீட்டது அவ்விடுதி.
மேலும் அவரை பரிசோதித்த விடுதி காப்பாளர்கள், உடனடியாக அவரை மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ள கூறியுள்ளனர்.
அதன்படி மருத்துவரை அணுகிய Boyce, அவரின் கணையம் மற்றும் மண்ணீரல் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததை தெரிந்து கொண்டார்.
மேலும் மதுவை இனி ஒருமுறை குடித்தாலும், அவரின் உயிருக்கு ஆபத்தாகிவிடும் என்று மருத்துவர்கள் எச்சரித்தனர். அதிலிருந்து எட்டு மாதங்களாக மதுவை குடிக்காத Boyce, அந்த பழக்கத்திலிருந்து மீண்டு வந்துள்ளார்.
மது பழக்கத்திலிருந்து தான் மீண்டுவர பெரிதும் உதவிய அந்த விடுதிக்கு ஏதேனும் உதவ வேண்டும் என்று எண்ணிய Boyce, கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு விடுதியில் இருப்பவர்களுக்கு பரிசுப் பொருட்களை வாங்கிக் கொண்டு அவர்களை சந்தித்தார்.
இதுகுறித்து Boyce கூறுகையில், எனக்கு அந்த விடுதி செய்த உதவிக்கு, நான் கைம்மாறு செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அதன்படியே, கிறிஸ்துமஸை முன்னிட்டு விடுதியில் இருக்கும் அனைவருக்கும் பரிசுப் பொருட்களை வாங்கி வந்தேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் விடுதியின் மேலாளார் Jo Burton கூறுகையில், ‘எங்களது விடுதி அணியினர், வீடற்றவர்களுக்கு அடைக்கலமும், மனரீதியான துன்பங்களை கொண்டிருப்பவர்களுக்கு ஆறுதலையும் அளிப்பதை சேவையாக செய்து வருகிறோம், அவர்களுக்கு படுக்கையும் வழங்குகிறோம். Boyce, எங்களை பரிசுப்பொருட்களுடன் மீண்டும் வந்து சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.