கொவிட் பரவல் அச்சுறுத்தல் காரணமாக இலங்கைக்கு சுற்றுலா பிரயாணம் செய்வதற்கு தடை விதித்துள்ள 21 நாடுகளிடம் அந்த தடையை நீக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் குறித்த நாடுகளுடன் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் ஊடாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியம் , கட்டார் , மலேசியா , சிங்கப்பூர் , இத்தாலி , பிலிப்பைன்ஸ் , ஜேர்மன் , நோர்வே , ஜப்பான் , அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளிடமே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் விமான நிறுவனங்கள் மற்றும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை ஆகியவற்றுடன் இணைந்து கூட்டு வேலைத்திட்டமொன்று தொடங்கப்பட்டுள்ளதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் நாட்டின் சனத்தொகையில் 60 சதவீதமானோருக்கு தடுப்பூசிகளை வழங்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. கொவிட் தொற்றின் விளைவாக வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மேம்படுத்துவதாக அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.