நாக்பூர் டெஸ்டில், ‘சுழலில்’ அசத்திய இந்தியாவின் அஷ்வின், இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து மொத்தம் 8 (4+4) விக்கெட் கைப்பற்றினார். இவர், இரண்டாவது இன்னிங்சில் இலங்கையின் கமாகேவை போல்டாக்கியதன் மூலம், டெஸ்ட் அரங்கில் தனது 300வது விக்கெட்டை பதிவு செய்தார். இதுவரை இவர், 54 டெஸ்டில் 300 விக்கெட் சாய்த்துள்ளார். இதன்மூலம் டெஸ்ட் அரங்கில் அதிவேகமாக 300 விக்கெட் கைப்பற்றிய பவுலர் என்ற புதிய உலக சாதனை படைத்தார். இதற்கு முன், ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் டெனிஸ் லில்லீ, 56 டெஸ்டில் இந்த இலக்கை அடைந்திருந்தது சாதனையாக இருந்தது. இதன்மூலம் 36 ஆண்டுகால சாதனை முறியடிக்கப்பட்டது.
* இலங்கை சுழல் ஜாம்பவான் முத்தையா முரளிதரன், 58 டெஸ்டில் இந்த இலக்கை எட்டியிருந்தார். ஆஸ்திரேலியாவின் ரிச்சர்டு ஹாட்லீ, வெஸ்ட் இண்டீசின் மால்கம் மார்ஷல், தென் ஆப்ரிக்காவின் ஸ்டைன் தலா 61 டெஸ்டில் இம்மைல்கல்லை எட்டியிருந்தனர்.
50 விக்கெட்
இந்த ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட் கைப்பற்றிய 4வது பவுலரானார் அஷ்வின். இவர், 10 டெஸ்டில் 52 விக்கெட் சாய்த்துள்ளார். ஏற்கனவே தென் ஆப்ரிக்காவின் ரபாடா (54 விக்கெட், 10 டெஸ்ட்), இலங்கையின் ஹெராத் (52 விக்கெட், 11 டெஸ்ட்), ஆஸ்திரேலியாவின் நாதன் லியான் (51 விக்கெட், 8 டெஸ்ட்) இம்மைல்கல்லை எட்டியிருந்தனர்.
5
டெஸ்ட் அரங்கில் 300 அல்லது அதற்கு மேல் விக்கெட் சாய்த்த 5வது இந்திய பவுலர் என்ற பெருமை பெற்றார் அஷ்வின். ஏற்கனவே அனில் கும்ளே (619 விக்.,), கபில்தேவ் (434), ஹர்பஜன் சிங் (417), ஜாகிர் கான் (311) ஆகியோர் இச்சாதனை படைத்திருந்தனர்.
இதன் விவரம்:
வீரர் போட்டி விக்கெட்
கும்ளே 132 619
கபில்தேவ் 131 434
ஹர்பஜன் 103 417
ஜாகிர் 92 311
அஷ்வின் 54 300
ராசியான ஆஸி.,
தமிழக சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின், 31. இதுவரை 54 டெஸ்டில் 300 விக்கெட் கைப்பற்றி உள்ள இவர், 26 முறை 5 அல்லது அதற்கு மேல் விக்கெட் வீழ்த்தியுள்ளார். இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 7 முறை 10 அல்லது அதற்கு மேல் விக்கெட் சாய்த்துள்ளார். இவர், அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 71 விக்கெட் வீழ்த்தி உள்ளார்.
ஒவ்வொரு அணிகளுக்கு எதிராக அஷ்வின் கைப்பற்றிய விக்கெட்:
எதிரணி போட்டி விக்கெட்
ஆஸ்திரேலியா 14 71
வெஸ்ட் இண்டீஸ் 9 51
இலங்கை 8 46
நியூசிலாந்து 5 45
இங்கிலாந்து 11 45
தென் ஆப்ரிக்கா 5 31
வங்கதேசம் 2 11
சொந்தமண் சாதகம்
அஷ்வின், இந்திய மண்ணில் விளையாடிய 34 டெஸ்டில் 216 விக்கெட் கைப்பற்றி உள்ளார். தவிர, இலங்கை (38 விக்கெட், 6 டெஸ்ட்), ஆஸ்திரேலியா (21 விக்கெட், 6 டெஸ்ட்), வெஸ்ட் இண்டீஸ் (17 விக்கெட், 4 டெஸ்ட்), வங்கதேசம் (5 விக்கெட், ஒரு டெஸ்ட்), இங்கிலாந்து (3 விக்கெட், 2 டெஸ்ட்) மண்ணிலும் முத்திரை பதித்துள்ளார். ஆனால், தென் ஆப்ரிக்காவில் ஒரே ஒரு டெஸ்டில் விளையாடிய இவர், ஒரு விக்கெட் கூட பெறவில்லை.
எட்டாவது ‘சுழல்’ வீரர்
டெஸ்ட் அரங்கில் 300 விக்கெட் வீழ்த்திய 8 வது சுழல் வீரர் என்ற பெருமை பெற்றார் அஷ்வின். ஏற்கனவே இலங்கையின் முரளிதரன் (800 விக்.,), ஆஸ்திரேலியாவின் வார்ன் (708), இந்தியாவின் அனில் கும்ளே (619), ஹர்பஜன் சிங் (417), இலங்கையின் ஹெராத் (406), நியூசிலாந்தின் வெட்டோரி (362), வெஸ்ட் இண்டீசின் கிப்ஸ் (309) இந்த இலக்கை எட்டியிருந்தனர்.