பீம் ராவ் அம்பேத்கரை அவமதிக்கும் விதமாக, ட்விட்டரில் பதிவிட்டதற்காக, இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா மீது, வழக்குப் பதிவு செய்யுமாறு ஜோத்பூர் பட்டியலின சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டராக வலம்வருபவர், ஹர்திக் பாண்ட்யா. இவர்,கடந்த ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி, ட்விட்டர் வலைதளம் மூலம் அம்பேத்கரை அவமதிக்கும் விதமாக கருத்து ஒன்றைப் பதிவிட்டுள்ளார் என டி.ஆர் மெக்வால் என்பவர், ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் பட்டியலின சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், ஹர்திக் பாண்ட்யாவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், ”எந்த அம்பேத்கர் குறுக்குச் சட்டத்தை இயற்றியவர் மற்றும் அரசியல் அமைப்பு அல்லது நாட்டில் இட ஒதுக்கீடு எனப்படும் நோய்களைப் பரப்புபவர்களை உருவாக்கியவர்” என ஹர்திக் பாண்ட்யா பதிவிட்டிருக்கிறார்.
இந்தப் பதிவு, அம்பேத்கரை அவமதிக்கும் பதிவாகும். அதனால், அவர்மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என மனுவில் மெக்வால் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஹர்திக் பாண்ட்யா மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யுமாறு காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.