இன்றைய திகதியில் கொரோனாத் தொற்று காரணமாக பலரும் பல்வேறு வகையினதான உளவியல் சிக்கல்களுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.
சிலருக்கு சில காட்சிகளை பார்த்தவுடன் பிடிக்காது. ஒவ்வாமை அல்லது அருவருப்பு ஏற்படும். உதாரணமாக கோப்பியின் நுரையைப் பார்க்கவே சிலருக்கு எரிச்சலாக இருக்கும்.
ஒரு சிலர் ஸ்பாஞ்ச் எனப்படும் பஞ்சில் உள்ள சின்ன சின்ன ஓட்டைகளை பார்த்தால் அலர்ஜியாக இருக்கிறது என்பார்கள். இந்த ஒவ்வாமை நிலை ஏன் ஏற்படுகிறது?
ஏனெனில் சிலருக்கு தொற்று நோய்கள் மற்றும் ஒட்டுண்ணிகள் குறித்து அளவுக்கு அதிகமான அச்சம் இருப்பதால், அதே போன்ற வடிவத்தில் வேறு எதையேனும் பார்க்கும் பொழுது அருவருப்பு, பயம் கொள்வதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த பிரச்சனையை டிரைபோஃபோபியா என்றழைப்பர்.
தோலில் ஏற்படும் சில தொற்று நோய்களின் வடிவம் வட்டமாக இருப்பதும் சிலருக்கு பிடிக்காது. சின்னம்மை, தட்டம்மை, ரூபெல்லா, டைபஸ் மற்றும் ஸ்கார்லெட் காய்ச்சல் ஆகிய நோய்களும், செல்லப் பிராணிகளால் ஏற்படக்கூடிய ஸ்கேபிஸ், டிக்ஸ் மற்றும் பொட்ஃப்ளை போன்ற பல நோய்களும் வட்டமான ஒரு வடிவத்தில் தோள்மீது கொத்தாக இருக்கும்.
இதன் காரணமாக பலருக்கு அலர்ஜி ஒவ்வாமை ஏற்படும். இத்தகைய பிரச்சனை உடையவர்கள் அதீதமான அறுவறுப்படையும் மனநிலையை உடையவர்களாக இருப்பார்கள்.
இதுதொடர்பாக ஆய்வாளர்கள்,’ பரிணாம வளர்ச்சியால் சுற்றுச் சூழலிலிருந்து ஏற்படக்கூடிய சில தொற்று நோய்கள் குறித்து அதிகப்படியான அச்சத்தாலும், தொற்று நோய் குறித்து வெளியாகும் புகைப்படங்கள், தொற்று நோய் கிருமிகளின் வடிவங்கள், அதன் தோற்றங்கள் போன்றவற்றால் அவர்கள் சில உருவத்தைப் பார்த்து அறுவடைப்படைந்து அதன் காரணமாக பயம் கொள்கின்றனர். இதுவே இந்த ஒவ்வாமையின் காரணம் ‘என விளக்கமளிக்கிறார்கள்.
இத்தகைய பிரச்சினையை கொண்டவர்கள் ஓட்டைகள் அல்லது வட்ட வடிவத்தில் சுருள் சுருளாக சில பொருட்களை பார்த்தும் பயம் கொள்வார்கள். திரளாக இருக்கும் பொருட்களையும், விடயங்களையும் பார்த்தாலும் கூட ஒவ்வாமை கொள்வார்கள்.
வேறுசிலர் கொத்துக்கொத்தாக ஒரு பொருளைப் பார்த்தால் அச்சம் அடைவர். ஏனெனில் இத்தகைய உருவங்கள், வடிவங்கள் அவர்களுடைய ஆழ்மனதில் வேறொன்றை நினைவுபடுத்துகின்றன.
உதாரணத்திற்கு இத்தகைய வடிவங்கள் சில வகை நச்சுப் பாம்புகளையும், ஓக்டோபஸ் போன்ற நச்சு விலங்குகளையும் காண்பது போலிருப்பதால் இத்தகைய அச்சம் உருவாகிறது.
இதற்கு அவர்களை ஆழ்நிலை மயக்கத்திற்குட்படுத்தி, இவர்களின் மன ஆற்றலை மேம்படுத்தும் உளவியல் சிகிச்சையை அளித்தால் மெல்ல நாளடைவில் அதிலிருந்து விடுபடுவார்கள்.
டொக்டர் காமினி
தொகுப்பு அனுஷா
_____________________________________________________________________________