ஜெருசலேம் விவகாரத்தில் ட்ரம்பின் முடிவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து இயேசு கிறிஸ்து வாழ்ந்த இடமாகக் கருதப்படும் நாசரேத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாலஸ்தீனத்தில் உள்ள ஜெருசலேம் நகருக்கு இஸ்ரேல் – பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளும் உரிமை கோரி வருகின்றன.
இரு நாடுகளுமே அந்த நகரை தங்கள் நாட்டின் தலைநகரம் என அறிவித்துள்ளன. ஆனால், அதை பெரும்பாலான நாடுகள் ஏற்கவில்லை.
இந்த நிலையில், ஜெருசலேம் இஸ்ரேலின் தலைநகரம் என்பதை அங்கீகரிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ட்ரம்பின் இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கிறிஸ்தவர்களின் மிக முக்கிய புனிதத்தலமான இயேசு கிறிஸ்து வாழ்ந்த இடமாகக் கருதப்படும் நாசரேத்தில் இந்த ஆண்டிற்கான ஒருசில கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ட்ரம்ப் ஜெருசலேமைப் பற்றி கூறிய கருத்தினால் தாம் இப்போது சர்ச்சையான சூழ்நிலையில் இருப்பதாகவும் பாரம்பரியமாக கிறிஸ்துமஸ் தினத்தன்று நடைபெறும் ஆடல் பாடல் நிகழ்ச்சியை இரத்து செய்ய முடிவு செய்துள்ளதாகவும் நாசரேத் நகர செய்தித்தொடர்பாளர் சலிம் ஷரரா குறிப்பிட்டுள்ளார்.
கிறிஸ்துமஸ் ஆலய வழிபாடு வழக்கம் போல நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்தில் பெத்லகேம் மற்றும் ரமல்லா நகரில் உள்ள பேராலயங்களில் அலங்கரிக்கப்பட்டிருந்த விளக்குகள் அணைக்கப்பட்டன.