டோரிஸ் புயலில் சிக்கிய விமானம்: மரண பயத்தில் உறைந்த பயணிகள்
பிரித்தானியாவில் டோரிஸ் புயல் தாக்கிய வேளையில் பயணிகள் விமானம் ஒன்று புயலில் சிக்கி தடுமாறிய காணொளி காட்சி ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவில் மணிக்கு 100 கி.மி. வேகத்தில் டோரிஸ் புயல் தாக்கியுள்ளது. இந்த நிலையில் பயணிகள் விமானம் ஒன்று புயலில் சிக்கி தடுமாறிய காணொளி காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகியுள்ளது.
மான்செஸ்டர் விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சித்த குறித்த பயணிகள் விமானம் காற்றின் வேகத்தால் கடுமையாகத் தடுமாறிய காரணத்தால் விமானி தனது முயற்சியை கைவிட்டு அங்கிருந்து வேறு பகுதிக்கு விமானத்தை எடுத்துச் சென்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஆனால் விமானியின் அந்த முடிவுக்கு அடுத்த சிக்கல் காத்திருந்தது. காற்றின் வேகம் குறையும் மட்டும் விமானம் பறக்க போதுமான எரிபொருள் இல்லை என்ற எச்சரிக்கை வரவே, விமானத்தை அங்கிருந்து வேறு பகுதிக்கு கொண்டு செல்லும் திட்டம் கைவிடப்பட்டது.
தொடர்ந்து விமானியின் கடுமையான முயற்சிக்கு பின்னர் ஒருவழியாக தரையிறங்கியது. விமானம் பத்திரமாக தரையிறங்கியதும் பயணிகளில் ஒருவர், இந்த கடுமையான சூழலில் தங்களை பத்திரமாக தரையிறக்கிய விமானிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக பதிவிட்டுள்ளார்.
காலை 6 மணி அளவில் புயல் தாக்கியபோது, பெண்மணி ஒருவர் தலையில் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மட்டுமின்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாட்டின் முக்கிய சாலை போக்குவரத்து அனைத்தையும் அதிகாரிகள் மூடியிருந்தனர். விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டிருந்தது.