அமெரிக்க ஜனாதிபதியான டொனால்டு டிரம்ப் மீது அரசிலமைப்பு சட்டத்தை மீறிய குற்றத்திற்காக நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க அரசியலமைப்பு சட்டப்படி சாதாரண அரசு ஊழியர் முதல் ஜனாதிபதி வரை பதவி வகிப்பவர்கள் வெளிநாட்டு அரசாங்கத்திடம் இருந்து எவ்வித பரிசும் பணமும் பெறக்கூடாது என்பது விதியாகும்.
அதேபோல், அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகிப்பவர்கள் சொந்தமாக தொழில் செய்து அதன் மூலம் லாபம் ஈட்டுவராக இருக்கவும் கூடாது.
இச்சட்டத்தை தொடர்ந்து டிரம்ப் பதவியேற்பதற்கு முன்னதாக தனது அனைத்து தொழில்களின் பொறுப்பை குடும்பத்தினருக்கு வழங்கியுள்ளார்.
ஆனால், ஜனாதிபதி பதவியேற்ற பின்னர் அரசியலமைப்பு சட்டத்தை மீறியதாக தற்போது டிரம்ப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அமெரிக்க வரலாற்றில் முதன் முறையாக மேரிலாண்ட் மற்றும் வாஷிங்டன் நகரங்களை சேர்ந்த அரசு வழக்கறிஞர்கள் இவ்வழக்கினை டிரம்ப் மீது பதிவு செய்ய உள்ளனர்.
பதவியில் இருக்கும்போது தனது ஹொட்டல்கள் மூலம் டிரம்ப் வெளிநாட்டு நிதிகளை பெற்றுள்ளார் என்பதே அவர் மீது வைக்கப்பட்டுள்ள முக்கிய குற்றச்சாட்டு ஆகும்.
மேரிலாண்ட் நீதிமன்றத்தில் இன்று(திங்கள் கிழமை) வழக்கு பதிவு செய்யப்படுகிறது. எனினும், வழக்கு விசாரணையின்போது டிரம்ப் நீதிமன்றத்திற்கு வருவாரா? மாட்டாரா? என்பது தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.