டோக்கியோ பராலிம்பிக்கில் இன்றைய தினம் இலங்கையர்கள் மூவர் பங்கேற்றிருந்ததில் பிரியமல் ஜயகொடி மற்றும் சம்பத் பண்டார அடுத்த சுற்றுக்களில் பங்கேற்கும் தகுதியைப் பெற்றதுடன், டி.எஸ்.ஆர். தர்மசேன முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறினார்.
இன்று காலை நடைபெற்ற ஆண்களுக்கான தனிநபர் பி.ஆர்.ஐ. பிரிவு படகோட்டப் போட்டியின் இரண்டாவது தகுதி காண் சுற்றில் பங்கேற்ற பிரியமல் ஜயகொடி 12 நிமிடங்கள் 16.80 செக்கன்களில் நிறைவு செய்து கடைசி இடமான ஆறாவது இடத்தைப் பிடித்தார். எனினும், நாளைய தினம் நடைபெறும் அடுத்த சுற்றான ரிபிச்சேன்ஜ் சுற்றில் பங்கேற்கும் தகுதியை பெற்றார்.
இரண்டு தகுதிகாண் சுற்றுக்களாக நடைபெற்ற படகோட்டப் போட்டியில் முதல் சுற்றில் பிரேஸில் நாட்டைச் சேர்ந்த கெம்பொஸ் பெரெய்ரா 9 நிமிடங்கள் 57.59 செக்கன்களில் நிறைவு செய்து முதலிடம் பிடித்தார். இதன் இரண்டாவது தகுதி காண் சுற்றில் பங்கேற்ற உக்ரைன் நாட்டின் ரோமன் பொலியன்ஸ்கி 9 நிமிடங்கள் 56.47 செக்கன்களில் நிறைவு செய்து முதலிடத்தை கைப்பற்றினார்.
தத்தமது தகுதிகாண் போட்டிகளில் முதலிடம் பிடித்த காரணத்தினால் இவர்கள் இருவரும் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற அதேவேளை, முதல் கட்ட போட்டிகளில் பங்கேற்ற ஏனைய 10 பேரும் நாளைய தினம் (28) நடைபெறும் இரண்டாம் கட்ட சுற்றுப் போட்டியில் பங்கேற்பர்.
இரண்டு தகுதி சுற்றுகளை கொண்டபோட்டியாக நடைபெறும் இப்போட்டியில் இரண்டு பிரிவுகளிலும் தலா 5 பேர் பங்கேற்பர். இதில் இரண்டு பிரிவுகளிலும் முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் நான்கு பேர் ஏற்கனவே தகுதி பெற்ற இரண்டு பேருடன் இறுதிப் போட்டியில் போட்டியிடுவர்.
இதேவேளை, ஆண்களுக்கான வில்வித்தையில் பங்கேற்ற இலங்கையின் சம்பத் பண்டார மொத்தமாக 589 புள்ளிகளை பெற்றார். நிரல்படுத்தலுக்காக நடைபெற்ற போட்டியில் 31 பேர் பங்கேற்றிருந்ததில், சம்பத் பண்டார 23 ஆவது இடத்தையே பெற முடிந்தது. நாளைய தினம் நடைபெறும் 16 போட்டிகள் கொண்ட வெளியேறும் சுற்றில் (எலிமினேட்டர்) 609 புள்ளிகளுடன் 10 ஆவது இடத்தைப் பிடித்த விவேக் சிக்காரவுடன் சம்பத் பண்டார மோதவுள்ளார். இந்தப் போட்டி எதிர்வரும 3 ஆம் திகதி நடைபெறும்.
ஆண்களுக்கான சக்கர நாற்காலி டென்னிஸ் போட்டியில் சிலி நாட்டின் கெடல்டோ அலெக்ஸாண்டரை எதிர்கொண்ட இலங்கையின் டி.எஸ்.ஆர். தர்மசேன 3க்கு 6 , 4 க்கு 6 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்து வெளியேறினார்.